முகநூலில் வீடியோ பதிவு செய்துவிட்டு ரியல் எஸ்டேட் அதிபர் தற்கொலை தொழில் நஷ்டத்தால் விபரீத முடிவு

மதுரவாயலில் முகநூலில் தற்கொலை செய்யப்போவதாக வீடியோ பதிவு செய்து விட்டு, ரியல் எஸ்டேட் அதிபர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-05-21 23:30 GMT
பூந்தமல்லி,

மதுரவாயல், வெங்கடேஸ்வரா நகரைச் சேர்ந்தவர் சின்ராஜ் (வயது 48), ரியல் எஸ்டேட் அதிபர். இவரது மனைவி ரீட்டா. நேற்று முன்தினம் இரவு சின்ராஜ் வீட்டில் உள்ள தனது அறைக்குள் சென்று நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி கதவை தட்டினார்.
நீண்ட நேரம் ஆகியும் கதவை திறக்காததால் கூச்சலிட்டார்.

அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து கதவை உடைத்து பார்த்தபோது சின்ராஜ் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் இருப்பதைகண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த டாக்டர்கள் அவரை சோதித்து பார்த்துவிட்டு இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், சின்ராஜ் தற்கொலை செய்வதற்கு முன்பு, முகநூலில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில், தனது தற்கொலைக்கான காரணம் குறித்து வெளியிட்டிருந்தார்.

அந்த வீடியோவில் அவர் பேசும்போது, ‘ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்வதற்கு வட்டிக்கு பணம் வாங்கி இடத்தை வாங்குகிறோம். அந்த இடத்தை வாடிக்கையாளர்களுக்கு விற்று லாபம் அடைய முயன்றால், இந்த துறையில் உள்ள தேவையற்ற கட்டுப்பாடு விதிகளால் இடத்தை விற்க தாமதமாகிறது. இதனால் நாங்கள் நஷ்டம் அடைகிறோம். எங்களால் வாடிக்கையாளர்கள், நில உரிமையாளர்களுக்கு பதில் சொல்ல முடியவில்லை.

கடந்த 5 ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் தொழிலை ஒழித்து கட்டிவிட்டார்கள். இந்த நிலையில் நிம்மதி இல்லை என்ற மன உளைச்சலோடு நான் இறந்து விடலாம் என்ற முடிவில் வந்துள்ளேன். இந்த மண்ணை விட்டும் எனது குடும்பத்தை விட்டும் செல்வது மனதுக்கு கஷ்டமாக உள்ளது இருந்தாலும் நான் மறைகிறேன் என்று அந்த வீடியோவில் பதிவிட்டு இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து மதுரவாயல் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்