பள்ளியில் வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ.14 லட்சம் மோசடி ஆசிரியர்கள் 2 பேர் மீது வழக்கு

பள்ளியில் வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ.14 லட்சம் மோசடி செய்த ஆசிரியர்கள் 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2019-05-21 22:15 GMT
திருச்சி,

திருச்சி விமான நிலையம் அருகே உள்ள கக்கன் காலனியை சேர்ந்தவர் சிங்கராஜன். இவருடைய மகள் மகாலட்சுமி (வயது 28). இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு சங்கரநாராயணன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு கணவன்-மனைவி இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதால், கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று தந்தை யுடன் வசித்து வருகிறார்.

சங்கரநாராயணன் விருதுநகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். அவருடன் அதே பள்ளியில் பணியாற்றி வருபவர் தேன்மொழி. இவர்கள் இருவரும் மகாலட்சுமியிடம் அதேபள்ளியில் ஆசிரியை பணி வாங்கி தருவதாகவும், அதற்கு பணம் தர வேண்டும் என்றும் கூறினர்.

ரூ.14 லட்சம் மோசடி

இதனை நம்பி மகாலட்சுமி கடந்த 2016-ம் ஆண்டு ரூ.14 லட்சத்தை அவர்களிடம் கொடுத்தார். பணத்தை பெற்று கொண்ட பிறகு, அவர்கள் கூறியபடி வேலை வாங்கி தரவில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை. இதுபற்றி கேட்டபோது, இருவரும் முறையாக பதில் அளிக்காமல் இருந்துள்ளனர்.

இதையடுத்து மகாலட்சுமி திருச்சி மாநகர போலீஸ் துணை கமிஷனர் மயில்வாகனனிடம் புகார் அளித்தார். அவரது உத்தரவின்பேரில் கே.கே.நகர் குற்றப்பிரிவு போலீசார் ஆசிரியர்களான சங்கரநாராயணன், தேன்மொழி ஆகிய 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்