ஆரணி அருகே ஊராட்சி செயலாளர், பராமரிப்பாளர் பணியிடை நீக்கம் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் எதிரொலி

ஆரணி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத ஊராட்சி செயலாளர், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பராமரிப்பாளர் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து வட்டார வளர்ச்சி அலுவலர் ஆர்.குப்புசாமி உத்தரவிட்டார்.

Update: 2019-05-22 22:45 GMT
ஆரணி, 

ஆரணியை அடுத்த பையூர் ஊராட்சியில் எத்திராஜ் நகர், ஸ்ரீராம் நகர் பகுதிகளில் பொதுமக்களுக்கு குடிநீர் சரிவர வழங்கப்படவில்லை என அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஊராட்சி செயலாளரிடமும், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பராமரிப்பாளரிடமும் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று ஆரணி - வாழப்பந்தல் நெடுஞ்சாலையில் காலிக் குடங்களுடன் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக பொதுமக்கள் கலெக்டருக்கும், மாவட்ட திட்ட அலுவலருக்கும் போன் மூலம் தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் ஆரணி வட்டார வளர்ச்சி அலுவலர் ஆர்.குப்புசாமி, ஒன்றிய பொறியாளர்கள் ரமேஷ், ஜெயந்தி, பணி மேற்பார்வையாளர் சுஜாதா, ஊராட்சி செயலாளர் அருண், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பராமரிப்பாளர் வாசு, ஆரணி தாலுகா போலீசார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று, சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பொதுமக்கள், ஊராட்சி செயலாளரிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பராமரிப்பாளர் வாசு ஆபாசமாக பேசுவதாக புகார் கூறினர். இதனையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர் குப்புசாமி லாரி மூலம் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அதைத் தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதனையடுத்து கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி உத்தரவின் பேரில், பையூர் ஊராட்சி செயலாளர் அருண், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பராமரிப்பாளர் வாசு ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து வட்டார வளர்ச்சி அலுவலர் ஆர்.குப்புசாமி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்