கர்ப்பிணிகள் ரத்தஅழுத்த பரிசோதனையை தவறாமல் செய்ய வேண்டும் மருத்துவக்கல்லூரி முதல்வர் பேச்சு

கர்ப்பிணிகள் ரத்தஅழுத்த பரிசோதனையை தவறாமல் செய்ய வேண்டும் என மருத்துவக்கல்லூரி முதல்வர் குமுதாலிங்கராஜ் பேசினார்.

Update: 2019-05-22 23:00 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை ராசாமிராசுதார் அரசு மருத்துவமனையில் மகப்பேறு பிரிவு சார்பில் கர்ப்பகால உயர் ரத்தஅழுத்தம் மற்றும் வலிப்பு நோய் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நேற்று நடந்தது. தஞ்சை மருத்துவக்கல்லூரி முதல்வர் குமுதாலிங்கராஜ் குத்துவிளக்கேற்றி கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நிறைய பேர் படித்து இருந்தாலும் உடல் நலம் குறித்து விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறார்கள். நாம் அறிவியல் தொழில்நுட்பத்தில் என்ன தான் வளர்ச்சி அடைந்திருந்தாலும் மூடநம்பிக்கைகளை நம்பி கொண்டிக்கின்றனர். பிரசவம் என்பது மறுபிறப்பு. முன்பெல்லாம் பிரசவத்தின்போது திடீரென பெண்கள் இறந்துவிடுவார்கள். எதற்காக இறந்தார்கள் என்ற காரணம் தெரியாது. அவர்களுக்கு உப்புநீர், உயர் ரத்தஅழுத்தம், சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்து இருக்கும்.

முன்பு பிரசவத்திற்கு செல்பவர்கள் பாதுகாப்பாக வீட்டிற்கு திரும்பி வருவார்களா? என்று உறுதியாக கூற முடியாது. அதனால் தான் சீமந்தம் நடத்தி கர்ப்பிணிகளுக்கு பிடித்தவைகளை எல்லாம் செய்து கொடுப்பார்கள். ஆனால் இன்றைக்கு சந்தோஷமாக பிரசவத்திற்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பக் கூடிய நிலை ஏற்பட்டு இருக்கிறது. அந்த அளவுக்கு மருத்துவத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

ராசாமிராசுதார் அரசு மருத்துவமனையில் ஆண்டுக்கு 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரசவங்கள் நடக்கின்றன. எல்லா வசதிகளும் உள்ளன. கர்ப்பிணிகள் ரத்தஅழுத்தம் எப்படி இருக்கிறது என தவறாமல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மூடநம்பிக்கைகளை நம்பாமல் உரிய சிகிச்சைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

கர்ப்பிணிகள் என்னென்ன உணவுகளை சாப்பிட வேண்டும். உடற்பயிற்சி எப்படி செய்ய வேண்டும். ஓய்வு எப்படி எடுக்க வேண்டும் என சொல்லி கொடுக்கப்படுகிறது. கர்ப்பிணிகள் மல்லாந்து படுக்கக்கூடாது. அப்படியே எழக்கூடாது என்று சொல்வார்கள். அவற்றில் அறிவியல்பூர்வமான கருத்து இருக்கிறது.

இப்போதும் இடதுபக்கமாக தான் திரும்பி படுக்க வேண்டும். அப்படி தான் எழ வேண்டும். உங்கள் உடம்பில் உள்ள ரத்தம் தான் வயிற்றில் உள்ள குழந்தைகளுக்கும் செல்கிறது. ரத்தஅழுத்தம் உங்களுக்கு குறைவாக இருந்தால் குழந்தைகள் ஆரோக்கியமாக பிறக்காது. முதல்-அமைச்சர் காப்பீட்டு திட்ட அட்டைகளை வாங்கி கொள்ள வேண்டும்.

ராசாமிராசுதார் அரசு மருத்துவமனைக்கு தஞ்சை மட்டுமின்றி பிற மாவட்டங் களில் இருந்தும் பரிசோதனைக்காக வருகின்றனர். புறநோயாளிகள் பிரிவில் ஒரு நாளைக்கு 400 பேர் வரை பரிசோதனை மேற்கொள்ளப்படுவதால் தாமதம் ஆனாலும் பொருட்படுத்தக்கூடாது. உங்கள் உடல் நலனை பார்த்து கொண்டு நல்லமுறையில் குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மருத்துவ கண் காணிப்பாளர் பாரதி, துணை கண்காணிப்பாளர் குமரன், நிலைய மருத்துவ அலுவலர் உஷா, லக்சயா திட்ட மருத்துவர் அனிதா மற்றும் கர்ப்பிணிகள், மருத்துவர்கள் கலந்து கொண்டனர். கர்ப்பிணிகள் தங்களது சந்தேகங்களை மருத்துவர்களிடம் கேட்டு பயன் அடைந்தனர். மகப்பேறு துறை தலைவர் மருத்துவர் ராஜராஜேஸ்வரி வரவேற்றார்.

மேலும் செய்திகள்