மண்ணிவாக்கத்தில் 2-வது திருமணம் செய்த பெண் குத்திக்கொலை மகன் கைது

மண்ணிவாக்கத்தில் 2-வது திருமணம் செய்த பெண் குத்திக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது மகன் கைது செய்யப்பட்டார்.

Update: 2019-05-22 23:30 GMT
வண்டலூர், 

காஞ்சீபுரம் மாவட்டம் மண்ணிவாக்கம் கக்கன்ஜி தெருவை சேர்ந்தவர் அன்பு. இவரது மனைவி பவானி. இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் பவானியின் கணவர் அன்பு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்து விட்டார். அதன்பின்னர் பவானி கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்தார். அப்போது அங்கு கட்டிட மேஸ்திரியாக பணிபுரிந்து வந்த நடுவீரப்பட்டு கிராமத்தை சேர்ந்த ராஜா (வயது 39), என்பவருடன் பவானிக்கு பழக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பிறகு பவானி முதல் கணவருக்கு பிறந்த தனது 2 மகன்கள், ஒரு மகள் ஆகியோரை மண்ணிவாக்கத்தில் உள்ள முதல் கணவரின் தாய் வீட்டில் விட்டுவிட்டு 2-வதாக திருமணம் செய்து கொண்ட ராஜாவுடன் நடுவீரப்பட்டு கிராமத்திற்கு சென்று அங்கு அவருடன் வாழ்ந்து வந்தார்.

இந்த நிலையில் மண்ணிவாக்கம் கக்கன்ஜி தெருவில் முதல் கணவரின் தாய் வீட்டில் வளர்ந்து வரும் தனது மகளை பார்ப்பதற்காக 2-வது கணவர் ராஜாவுடன் பவானி நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் மண்ணிவாக்கம் சென்றார். பின்னர் தனது மகளை சந்தித்து பேசிவிட்டு மீண்டும் ராஜாவுடன் மோட்டார் சைக்கிளில் பவானி நடுவீரப்பட்டு நோக்கி மண்ணிவாக்கம் முடிச்சூர் சாலை வழியாக வந்து கொண்டிருந்தார்.

அப்போது அந்த சாலையில் ஓரமாக நின்று கொண்டிருந்த பவானியின் மகன் சம்பத்(24), தனது தாய் பவானி 2-வது கணவருடன் மோட்டார் சைக்கிளில் செல்வதை பார்த்தவுடன் ஆத்திரம் அடைந்து அவர்களை மோட்டார் சைக்கிளில் துரத்தி சென்றார். மண்ணிவாக்கம் சண்முகா நகர் 13-வது தெரு அருகே செல்லும்போது சம்பத் தனது மோட்டார் சைக்கிள் பெட்ரோல் டேங்க் கவரில் வைத்து இருந்த ஸ்குரூடிரைவரை எடுத்து தாய் பவானியின் வயிற்றில் குத்தினார்.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி பவானியும், ராஜாவும் கீழே விழுந்தனர். பவானி கீழே விழும்போது சாலையோரமாக இருந்த பஸ் நிழற்குடை இரும்பு கம்பியில் தலை மோதி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

உடனே அங்கிருந்து சம்பத் அதே மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்று விட்டார். இது குறித்து தகவல் அறிந்த ஓட்டேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்ட பவானி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்த ராஜாவை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர்.

இந்த நிலையில் தாயை குத்திக்கொலை செய்து விட்டு தப்பிச்சென்ற சம்பத்தை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர் கூறியதாவது:-

எங்களுடைய தந்தை இறந்த சில மாதங்களில் அம்மா 2-வதாக நடுவீரப்பட்டு கிராமத்தை சேர்ந்த ராஜா என்பவரை திருமணம் செய்து கொண்டார். கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக நான் என் தம்பி, தங்கை ஆகிய 3 பேரும் பாட்டி வீட்டில் கஷ்டப்பட்டு வாழ்ந்து வருகிறோம். இப்படி இருக்கும்போது 7 ஆண்டுகளுக்கு பிறகு திடீரென ஏன் என் தங்கையை வந்து எனது அம்மா பார்க்க வேண்டும். 7 ஆண்டுகளாக நாங்கள் கஷ்டப்படும்போது பார்க்க வரவில்லையே என்ற ஆத்திரத்தில் குத்தினேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்