சிறுமி கொலை: ‘கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கொன்றோம்’ கைதான தாய் - காதலன் வாக்குமூலம்

தொட்டியம் அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் சிறுமியை கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட அவளது தாய் மற்றும் கள்ளக்காதலன் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தனர்.

Update: 2019-05-22 23:00 GMT
முசிறி,

திண்டுக்கல் மாவட்டம், சிறுமலைபழையூர் பகுதியை சேர்ந்தவர் பிரசன்னபாபு(வயது 38). இவரது மனைவி நித்யகமலா(32). எம்.பி.ஏ. பட்டதாரி. இவர்களுக்கு லத்திகாஸ்ரீ(5) என்ற பெண் குழந்தை இருந்தது. நித்யகமலா மதுரையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பணியாற்றியபோது அங்கு உடற்கல்வி இயக்குனராக வேலை பார்த்த திண்டுக்கல்லை அடுத்த சீலப்பாடி அருகே உள்ள அழகிரிகவுண்டனூரை சேர்ந்த முத்துப்பாண்டி(36) என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது.

இதனை அறிந்த பிரசன்னபாபு மனைவியை கண்டித்தார். இருந்தாலும் நித்யகமலா முத்துப்பாண்டியுடனான கள்ளக்காதலை கைவிடவில்லை. இதனால், மனைவியிடம் இருந்து பிரசன்னபாபு பிரிந்து சென்று விட்டார். குழந்தை லத்திகாஸ்ரீ தாயுடன் இருந்தது. பின்னர், முத்துப்பாண்டியும், நித்யகமலாவும் ஒன்றாக குடும்பம் நடத்த தொடங்கினர். மேலும், பல்வேறு இடங்களுக்கு ஒன்றாக சென்று வந்தனர். முத்துபாண்டிக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி, மகன்கள் உள்ளனர்.

இந்தநிலையில் முத்துபாண்டி, நித்யகமலா மற்றும் லத்திகாஸ்ரீயை அழைத்துக்கொண்டு திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூரில் உள்ள குல தெய்வ கோவிலுக்கு சாமி கும்பிட வந்தார். பின்னர், அங்கேயே பணிபுரிய முடிவு செய்த அவர்கள், ஒரு வீட்டை வாடகைக்கு பிடித்து தங்கினர். லத்திகாஸ்ரீயையும் நல்ல பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க முடிவு செய்தனர். இதற்காக சில புத்தகங்களை வாங்கி கொடுத்து லத்திகாஸ்ரீயை படிக்க வற்புறுத்தியுள்ளனர். ஆனால், சிறுமி புத்தகங்களை படிக்காமல் சம்பவத்தன்று வீட்டில் டி.வி. பார்த்துக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், சிறுமியை இருவரும் சேர்ந்து தென்னை மட்டையாலும், வயராலும் அடித்தனர். இதில் உடல் முழுவதும் பலத்த காயம் அடைந்த சிறுமி மயங்கி விழுந்தார். உடனே சிறுமியை தூக்கிக்கொண்டு காட்டுப்புத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் சேலம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட லத்திகாஸ்ரீ அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த காட்டுப்புத்தூர் போலீசார் சேலத்துக்கு விரைந்து சென்று முத்துப்பாண்டி, நித்யகமலா ஆகிய இருவரையும் போலீஸ்நிலையத்திற்கு அழைத்து வந்தனர். பிரசன்னபாபுவையும் போலீசார் அழைத்ததன் பேரில் அவரும் போலீஸ் நிலையம் விரைந்து வந்தார். பின்னர் அவர்கள் 3 பேரிடமும் நீண்ட நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

பின்னர் பிரசன்னபாபு, கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் நித்யகமலாவும், முத்துப்பாண்டியும் சேர்ந்து தனது மகளை அடித்து கொன்று விட்டதாக போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து நித்யகமலாவையும், முத்துபாண்டியையும் கைது செய்தனர்.

பின்னர், நித்யகமலாவும், முத்துப்பாண்டியும் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் லத்திகாஸ்ரீயை அடித்து கொன்று விட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து, முசிறி போலீஸ் துணை சூப்பிரண்டு தமிழ்மாறன் உத்தரவின் பேரில், தொட்டியம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர், சப்-இனஸ்பெக்டர் சித்ராதேவி மற்றும் போலீசார் சிறுமியின் கொலைக்கு காரணமான நித்யகமலா, முத்துப்பாண்டி ஆகிய இருவரையும் முசிறி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

மாஜிஸ்திரேட்டு நசீர் அலி அவர்களை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட் டார். அதன்பேரில், முத்துப் பாண்டி திருச்சி மத்திய சிறையிலும், நித்யகமலா மகளிர் சிறையிலும் அடைக்கப்பட்டனர். 

மேலும் செய்திகள்