வன்முறையை தூண்டும் வகையில் பேசிய அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

வன்முறையை தூண்டும் வகையில் பேசிய அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனரிடம் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் மனு கொடுத்தனர்.

Update: 2019-05-22 22:30 GMT
கோவை,

கோவை மேற்கு மாவட்ட மக்கள் நீதி மய்யம் பொறுப்பாளர் சிட்கோ சிவா தலைமையில் அந்த கட்சியின் நிர்வாகிகள் பலர் நேற்று காலை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்தனர். பின்னர் அவர்கள் கமிஷனர் சுமித் சரணை சந்தித்து ஒரு புகார் மனுவை கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசும்போது, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனின் நாக்கை அறுப்பேன் என்றும், மக்கள் அனைவரும் சேர்ந்து அவருடைய நாக்கை அறுக்க வேண்டும் என்றும் வன்முறையை தூண்டும் வகையில் பேசி உள்ளார்.

அமைச்சர் ராஜேந்திரபாலாஜி இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி பதவி பிரமாணம் செய்து கொண்டு, தான் அமைச்சர் என்பதைகூட மறந்து இதுபோன்று பேசி உள்ளார். கமல்ஹாசன் கூறிய கருத்துக்கு மறுப்போ அல்லது எதிர்ப்போ இருந்தால் அதற்கு ஜனநாயக அடிப்படையில் எதிர் கருத்து தெரிவிக்க அனைவருக்கும் உரிமை உள்ளது.

ஆனால் அதை செய்யாமல் கமல்ஹாசனின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலும், பொதுமக்களை தூண்டும் வகையிலும் பேசி இருப்பதை ஏற்க முடியாது. மேலும் கடந்த 16-ந் தேதி கரூர் வேலாயுதம்பாளையத்தில் நடந்த பொதுக்கூட்டத்தின் போது முட்டை மற்றும் கற்களை தூக்கி வீசினார்கள்.

இந்த சம்பவம் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது சந்தேகத்தை ஏற்படுத்தும்படி உள்ளது. எனவே அவர் மீது வழக்குப்பதிவு செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்