சேலம் கன்னங்குறிச்சியில் தொழிலாளி மர்ம சாவு போலீசார் தீவிர விசாரணை

சேலம் கன்னங்குறிச்சியில் தொழிலாளி மர்ம சாவு தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Update: 2019-05-23 22:15 GMT

கன்னங்குறிச்சி,

சேலம் கன்னங்குறிச்சி சின்னதிருப்பதி பெரியார் நகரை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 35). தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி இருந்தார். செந்தில்குமாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவருடைய மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டார். இதையடுத்து செந்தில்குமார் தனது தாயார் அகிலாண்டேஸ்வரியுடன் வசித்து வந்தார். கடந்த 21–ந் தேதி செந்தில்குமாரின் பக்கத்து வீட்டை சேர்ந்த அலமேலு என்பவரின் வீட்டில் திருட்டு போனது. செந்தில்குமார் தான் அந்த வீட்டில் திருடியிருக்கலாம் என சந்தேகித்து அவரை சிலர் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் காலையில் செந்தில்குமார் தனது தாயாரிடம் செலவுக்கு பணம் வாங்கிக்கொண்டு வீட்டை வீட்டு வெளியே சென்றார். பின்னர் மதியம் கோரிமேடு கே.கே.நகர் டாஸ்மாக் கடை அருகே அவர் மயங்கிய நிலையில் கிடந்தார். இதைப்பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் செந்தில்குமார் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

போலீசார் விசாரணை

இதையறிந்து அங்கு வந்த கன்னங்குறிச்சி போலீசார் செந்தில்குமார் பிணத்தை மீட்டு விசாரணை நடத்தினர். பின்னர் அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக அகிலாண்டேஸ்வரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் எனது மகனை 4 பேர் கொண்ட கும்பல் தாக்கியதால் தான் இறந்ததாகவும், செந்தில்குமார் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், இதில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

அதன் பேரில் செந்தில்குமார் இறப்பு தொடர்பாக மர்ம சாவு பிரிவின் கீழ் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல் வழக்குப்பதிவு செய்து அவர் தாக்கப்பட்டதால் இறந்தாரா?, குடிபோதையால் இறந்தாரா? என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்