நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி எதிரொலி : கர்நாடகத்தில் கூட்டணி அரசு தப்புமா?

நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றுள்ளதால், கூட்டணி அரசு தப்புமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Update: 2019-05-23 23:45 GMT

பெங்களூரு, 

கடந்த 2018–ம் ஆண்டு நடந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. பா.ஜனதா 104 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதையடுத்து காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து, ஆட்சியை பிடித்தன.

குமாரசாமி முதல்–மந்திரியாக உள்ளார். காங்கிரசை சேர்ந்த பரமேஸ்வர் துணை முதல்–மந்திரியாக பதவி வகிக்கிறார். இந்த கூட்டணி அரசு நேற்றுடன் ஓராண்டை நிறைவு செய்தது. இந்த கூட்டணி அரசை கவிழ்க்க பா.ஜனதா ‘ஆபரே‌ஷன் தாமரை’ மூலம் காங்கிரஸ்–ஜனதாதளம் (எஸ்) கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களை இழுக்க முயற்சி செய்தது. ஆனால் அந்த முயற்சி வெற்றி பெறவில்லை.

இதையடுத்து பா.ஜனதா, நாடாளுமன்ற தேர்தலில் கவனம் செலுத்தியது. இந்த தேர்தல் பிரசாரத்தில், பிரதமர் மோடி, கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா ஆகியோர் பேசுகையில், கர்நாடகத்தில் பா.ஜனதாவை அதிக இடங்களில் வெற்றி பெற செய்தால், கூட்டணி அரசு கவிழும் என்று பகிரங்கமாக கூறினர்.

இந்த நிலையில் பா.ஜனதா தலைவர்கள் எதிர்பார்த்ததை விட அக்கட்சி நாடாளுமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. மத்தியிலும் பா.ஜனதா சொந்த பலத்தில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது. காங்கிரஸ்–ஜனதா தளம் (எஸ்) கூட்டணி கட்சிகள் படுதோல்வி அடைந்துள்ளன. இரு இடங்களில் மட்டுமே அக்கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன.

இதனால் அக்கட்சிகளின் தலைவர்கள் அதிர்ச்சியில் உறைந்துபோயுள்ளனர். இந்த நிலையில் கர்நாடகத்தில் கூட்டணி அரசு தப்புமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அடுத்த சில நாட்களில் ‘ஆபரே‌ஷன் தாமரை’ திட்டத்தை மீண்டும் தொடங்க பா.ஜனதா தலைவர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிஞ்சோலி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் சட்டசபையில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களின் பலம் 105 அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்