திருப்பூரில் கார் திருடிய வாலிபர் கைது

திருப்பூரில் கார் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-05-25 22:45 GMT

திருப்பூர்,

திருப்பூர் பிரிட்ஜ்வே காலனியில் வெங்கடாசலம்(வயது 50) என்பவர் கார் கன்சல்டிங் நிறுவனத்தை நடத்தி வருகிறார். அந்த நிறுவன வளாகத்தில் கார்கள் நிறுத்தி வைத்திருப்பது வழக்கம். கடந்த ஜனவரி மாதம் 27–ந் தேதி காவலாளி கருப்புசாமி இரவு பணியில் இருந்தபோது 3 பேர் அங்கு வந்தனர். பின்னர் அவர்களில் 2 பேர் கருப்புசாமியிடம் பேச்சுக்கொடுத்து கவனத்தை திசை திருப்பியுள்ளனர்.

அந்த நேரத்தில் கன்சல்டிங் நிறுவன வளாகத்துக்குள் மற்றொருவர் புகுந்து அங்கிருந்த ஒரு காரை திருடிச்சென்று விட்டார். பின்னர் மர்ம ஆசாமிகள் 2 பேரும் அங்கிருந்து சென்று விட்டனர். கார் திருடப்பட்டது குறித்து மறுநாள் காலை வெங்கடாசலம் திருப்பூர் வடக்கு குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அங்கு பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

திருப்பூர் மாநகர போலீஸ் கமி‌ஷனர் சஞ்சய்குமார் உத்தரவின் பேரில் துணை கமி‌ஷனர் உமா மேற்பார்வையில் வடக்கு உதவி கமி‌ஷனர் ரமேஷ் கிருஷ்ணன் தலைமையில் சப்–இன்ஸ்பெக்டர் சாம்ஆல்பர்ட் மற்றும் தனிப்படை போலீசார் மர்ம ஆசாமிகளை தேடி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று காலை திருப்பூர் காலேஜ் ரோட்டில் வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினார்கள். இதில் அந்த கார், வெங்கடாசலத்துக்கு சொந்தமான நிறுவன வளாகத்தில் இருந்து திருட்டு போன கார் என்பது தெரியவந்தது. காரில் வந்த நபரை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரித்தனர்.

விசாரணையில் அவர் திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் பகுதியை சேர்ந்த ராமஜெயம்(32) என்பதும், சம்பவத்தன்று இவர் மேலும் 2 பேருடன் வந்து காரை திருடிச்சென்றது தெரியவந்தது. அந்த காரை விற்பனை செய்ய வந்தபோது போலீசில் சிக்கினார். அவரிடம் இருந்து காரை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ராமஜெயத்தை போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 2 பேர் ஏற்கனவே திருட்டு வழக்கு தொடர்பாக விழுப்புரம் போலீசாரால் கைது செய்யப்பட்டு அவர்கள் சிறையில் வைக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்