ஜலகண்டாபுரம் அருகே குண்டு பாய்ந்து சிறுவன் படுகாயம்
ஜலகண்டாபுரம் அருகே, குண்டு பாய்ந்து சிறுவன் படுகாயம் அடைந்தான்.;
ஜலகண்டாபுரம்,
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே தோரமங்கலம் கிராமம் பொடையன் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 35). விசைத்தறி கூலித்தொழிலாளி. அவரது மனைவி சுமதி (27).
இவர்களுக்கு வெங்கடேஷ் (8), தர்ஷினி (4) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். செல்வராஜூக்கும், அவரது மனைவி சுமதிக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டு அதே ஊரில் தனித்தனியாக வசித்து வருகிறார்கள். இதில் சுமதியுடன், அவரது தம்பி தமிழ்செல்வன் வசித்து வருகிறார். சுமதியின் குழந்தைகள் இருவரும் ஓமலூர் அருகே செம்மாண்டப்பட்டியில் உள்ள சுமதியின் தாயார் பராமரிப்பில் உள்ளனர். அங்குள்ள ஒரு பள்ளியில் வெங்கடேஷ் 3-ம் வகுப்பும், தர்ஷினி அங்கன்வாடி மையத்திலும் படித்து வருகிறார்கள். பள்ளி விடுமுறை விடப்பட்டதால் குழந்தைகள் 2 பேரும் பொடையன் தெரு வந்து சுமதியுடன் இருந்து வருகிறார்கள்.
நேற்று காலை 9 மணியளவில் சுமதியின் தம்பி வைத்து இருந்த ஏர்கன் துப்பாக்கியை குழந்தைகள் இருவரும் எடுத்து விளையாடி கொண்டிருந்தனர். அப்போது தர்ஷினியிடம் இருந்த துப்பாக்கியின் விசையில் கைப்பட்டு திடீரென வெடித்தது. இதில் வெங்கடேசின் கழுத்து பகுதியில் குண்டு பாய்ந்தது. இதில் அவன் படுகாயம் அடைந்தான். இதனால் வலிதாங்க முடியாமல் அலறிதுடித்த அவன் கீழே விழுந்தான்.
இதை அறிந்ததும் அருகில் இருந்தவர்கள் வெங்கடேசை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் கொண்டு சென்று சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இதுபற்றி ஜலகண்டாபுரம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.