புதுவண்ணாரப்பேட்டை, பெரம்பூரில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
குடிநீர் கேட்டு புதுவண்ணாரப்பேட்டை மற்றும் பெரம்பூரில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.;
பெரம்பூர்,
சென்னை புதுவண்ணாரப்பேட்டை பூண்டி தங்கம்மாள் தெரு, பூச்சம்மாள் தெரு, முத்தையா மேஸ்திரி தெரு உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த ஓராண்டாக குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. லாரி தண்ணீரும் வினியோகிக்கப்படவில்லை என தெரிகிறது.
இதுகுறித்து பலமுறை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றுவாரிய அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை குடிநீர் கேட்டு புதுவண்ணாரப்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்துவந்த புதுவண்ணாரப்பேட்டை போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை சமரசம் செய்து கலைந்து போக செய்தனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பெரம்பூர்
இதேபோல் பெரம்பூர் வீனஸ் வாஞ்சிநாதன் தெரு, தீட்டிதோட்டம், மசூதி தெரு ஆகிய பகுதிகளில் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக குழாய்களில் தண்ணீர் வருவதில்லை எனவும், இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில் லாரிகள் மூலம் வழங்கப்பட்ட குடிநீரும் முறையாக வழங்கப்படவில்லை. முஸ்லிம்கள் நிறைந்த அந்த பகுதியில் ரம்ஜான் நோன்புக்கு அதிகாலையிலேயே தண்ணீர் தேவைப்படுவதால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
போக்குவரத்து பாதிப்பு
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதியை சேர்ந்த திரளான பொதுமக்கள் தங்களுக்கு முறையாக குடிநீர் வழங்கக்கேட்டு நேற்று காலை பெரம்பூர் வீனசில் செங்குன்றம் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் செம்பியம், திரு.வி.க.நகர் போலீசார் மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களை சமாதானம் செய்து வைத்தனர். பின்னர் அவர்களுக்கு லாரி மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.