ஆக்கிரமிப்பில் உள்ள 600 ஏக்கர் அரசு நிலத்தை மீட்க அதிகாரிகள் நடவடிக்கை

பொன்னேரி பகுதியில் தனி நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ள 600 ஏக்கர் அரசு நிலத்தை மீட்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

Update: 2019-06-10 22:15 GMT

பொன்னேரி,

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள காட்டூர் கிராமத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களை தனியார் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதில் பணப்பாக்கம் மற்றும் பெரியகரும்பூர் ஏரியில் உள்ள மேய்க்கால் அரசு புறம்போக்கு நிலங்களையும், சின்னம்பேடு மதுரா கீழ்மேனி ஏரியின் உட்புறத்தில் மேய்க்கால் அரசு புறம்போக்கு நிலங்களையும், அனுப்பம்பட்டு கிராமத்தில் பாசனத்திற்காக கொண்டு செல்லப்படும் கால்வாயிலும், பெரும்பேடு ஏரியில் உள்ள புறம்போக்கு நிலங்களையும், தேவம்பட்டு கிராமத்தில் பொது வழியையும், ஓடை, சுடுகாடு, குளம் பூவாமி கிராமத்தில் ஓடை புறம்போக்கு நிலத்தையும் அவர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.

இதேபோல் திருப்பாலைவனம் கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலங்களையும் தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இந்த ஆக்கிரமிப்பை அகற்றி அரசு நிலத்தை மீட்க வேண்டும் என்று வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் பலர் கலெக்டரிடம் புகார் மனு அளித்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்திருந்தார் பின்னர் அந்த புகார் மனுக்கள் மீது விசாரணை நடத்துமாறு பொன்னேரி வருவாய் துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

இதனையடுத்து காட்டூர், பணப்பாக்கம், பெரியகரும்பூர், சின்னம்பேடு, அனுப்பம்பட்டு, பெரும்பேடு, தேவம்பட்டு, திருப்பாலைவனம் ஆகிய கிராம நிர்வாக அலுவலர்கள் புகார் மனுக்களை ஆய்வு செய்தனர்.

இந்தநிலையில் காட்டூர் கிராமத்தில் 369 ஏக்கர், பணப்பாக்கம் பெரியகரும்பூர் கிராமத்தில் 36 ஏக்கர், சின்னம்பேடு கிராமத்தில் 92 ஏக்கர் உள்பட 600 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலங்களை தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து கிராம நிர்வாக அலுவலர்கள் ஆக்கிரமிப்பு மீது உரிய நடவடிக்கைக்காக பொன்னேரி வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அறிக்கை அளித்துள்ளனர்.

குறிப்பிட்ட கிராமங்களில் மட்டும் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 600 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலங்களை தனியார் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதை அகற்றியும், விவசாயிகளையும், கால்நடைகளையும் காப்பாற்ற மாவட்ட நிர்வாகம் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்