அமைந்தகரையில் வாலிபரிடம் செல்போன் பறித்த 2 பேருக்கு பொதுமக்கள் தர்மஅடி

அமைந்தகரையில் வாலிபரிடம் செல்போன் பறித்துவிட்டு மோட்டார்சைக்கிளில் தப்பிச்செல்ல முயன்ற கொள்ளையர்கள் 2 பேரை பொதுமக்கள் மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

Update: 2019-06-10 22:30 GMT

பூந்தமல்லி,

சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் பிரபாகர் (வயது 23). இவர், ஆன்லைன் நிறுவனத்தில் டெலிவரி பாயாக வேலை செய்து வருகிறார். பிரபாகர் நேற்று முன்தினம் இரவு அமைந்தகரை தனியார் வணிக வளாகம் அருகே தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர், பிரபாகரிடம் செல்போனை பறித்துவிட்டு தப்பி செல்ல முயன்றனர். பிரபாகர் திருடன் திருடன் என கூச்சலிட்டதால் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் மோட்டார் சைக்கிளில் தப்பி செல்ல முயன்ற கொள்ளையர்களை விரட்டி பிடிக்க முயன்றனர்.

இதனால் வேகமாக தப்பிச்செல்ல முயன்ற கொள்ளையர்கள் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி சாலையில் விழுந்தனர். அதில் 2 பேர் பொதுமக்களிடம் சிக்கிக்கொண்டனர். மற்றொருவர் தப்பி ஓடிவிட்டார்.

பிடிபட்ட கொள்ளையர்கள் இருவருக்கும் பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து அமைந்தகரை போலீசில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் அவர்கள், கோயம்பேட்டை சேர்ந்த தீபக்குமார் (22) மற்றும் வினோத்குமார்(26) என தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், தப்பி ஓடிய அவரது கூட்டாளியை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்