கொண்டகரை கிராமத்தில் நிலத்தடி நீர் திருட்டை கண்டித்து பொதுமக்கள் மறியல்

கொண்டகரை கிராமத்தில் நிலத்தடி நீர் திருடப்படுவதற்கு கண்டனம் தெரிவித்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-06-11 22:00 GMT

மீஞ்சூர்,

மீஞ்சூர் அடுத்த கொண்டகரை கிராமத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வரும் நிலையில் ஆழ்துளை கிணறுகளை அமைத்து நிலத்தடி நீரை திருடி சிலர் விற்பனை செய்து வருகின்றனர்.

நிலத்தடி நீர் திருடப்படுவதை கண்டித்தும், தங்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்க வேண்டும், கவுண்டர்பாளையம் முதல் பள்ளிபுரம் வரை உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என கோரி பொதுமக்கள் அந்த பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த மீஞ்சூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், மண்டல துணை தாசில்தார் செல்வகுமார், வருவாய் ஆய்வாளர் செந்தில்முருகன், கிராம நிர்வாக அலுவலர்கள் சசிகலா, சரவணகுமார், செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். மறியல் காரணமாக அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்