தாடிக்கொம்பு அருகே சந்தானவர்த்தினி ஆற்றில் மணல் அள்ளும் கும்பல்

தாடிக்கொம்பு அருகே சந்தானவர்த்தினி ஆற்றில் குவாரி அமைத்தது போல் இரவு, பகலாக மணல் அள்ளப்பட்டு வருவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு உள்ளது.

Update: 2019-06-11 23:00 GMT
தாடிக்கொம்பு,

திண்டுக்கல் அருகே உள்ள சிறுமலையில் உருவாகும் சந்தானவர்த்தினி ஆறு முள்ளிப்பாடி, உண்டார்பட்டி, திருகம்பட்டி, வேடசந்தூர் வழியாக சென்று குடகனாற்றில் கலக்கிறது. மேலும் ஒரு சில சிற்றாறுகளும் இந்த சந்தானவர்த்தினி ஆற்றில் கலக்கிறது. மழை பெய்யும் சமயங்களில் சந்தானவர்த்தினி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும்.

இந்த ஆற்றின் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதுதவிர குடிநீர் ஆதாரமாகவும் திகழ்கிறது. இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளாக பருவமழை முறையாக பெய்யாததால் ஆறு வறண்டு போய் காட்சியளிக்கிறது. இதை பயன்பத்தி மர்மநபர்கள் இரவு, பகலாக மணல் அள்ளி வருகின்றனர்.

குறிப்பாக தாடிக்கொம்பு அருகே உள்ள உண்டார்பட்டி, திருகம்பட்டி பகுதிகளில் பொக்லைன் எந்திரம் மூலம் லாரிகளில் மணல் அள்ளப்பட்டு வருகிறது. தினமும் 100-க்கும் மேற்பட்ட லாரிகள் மணல் அள்ளி செல்கின்றன. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தாலும், சீட்டு பெற்றுதான் மணல் அள்ளப்படுவதாக தெரிவிக்கின்றனர்.

இதுதவிர சந்தானவர்த்தினி ஆறு மட்டுமின்றி அருகில் உள்ள பட்டா நிலங்களிலும் மணல் இருக்கின்றன. இதனை குறைந்த விலைக்கு வாங்கி மர்மநபர்கள் மணலை அள்ளி செல்கின்றனர். இதனால் ஆற்றுப்படுகையில் குவாரி அமைத்தது போல் ராட்சத பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.

சந்தானவர்த்தினி ஆற்றில் மணல் அள்ளப்படுவதால் விவசாய கிணறுகள், ஆழ்துளை கிணறுகளின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. ஆற்றில் மழைக்காலங்களில் தண்ணீர் செல்லும்போது ஆற்றின் கரையோரத்தில் உள்ள மணல் பாங்கான பகுதிகளில் நீர் சேமிக்கப்படும். இதன் விளைவாக தாடிக்கொம்பு வரை சுமார் 7 முதல் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு விவசாய கிணறுகளுக்கு நீரோட்டம் இருக்கும்.

தொடர்ந்து சந்தானவர்த்தினி ஆற்றில் மணல் அள்ளப்பட்டு வருவதால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே மணல் அள்ளும் கும்பல் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்