ஏ.டி.எம்.எந்திரத்தை பழுதுபார்த்தபோது போலீசில் சிக்கியவரால் பரபரப்பு - வங்கி அதிகாரி உறுதி கூறியதால் விடுவிப்பு

வேலூர் அண்ணாசாலையில் உள்ள ஏ.டி.எம். எந்திரத்தை நள்ளிரவில் பழுதை சரி செய்ய வந்தவர், பணத்தை திருட வந்ததாக கருதப்பட்டு போலீஸ் பிடியில் சிக்கிய சம்பவம் நடந்துள்ளது.

Update: 2019-06-11 22:42 GMT
வேலூர்,

வேலூர் அண்ணாசாலையில் தனியார் வங்கி அருகே ஏ.டி.எம். மையம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு 11.30 மணி அளவில் மர்மநபர் ஒருவர் அதற்குள் புகுந்தார். அவர் அங்கு நீண்டநேரமாக அமர்ந்திருந்தார். அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற பெண் போலீஸ் ஒருவர் ஏ.டி.எம். மையத்துக்குள் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நபர் ஒருவர் அமர்ந்திருப்பதை கண்டார். இதுகுறித்து அந்த பெண் போலீஸ் வேலூர் தெற்கு போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து தெற்கு போலீசார் அங்கு உடனடியாக சென்றனர். அங்கு அந்த நபர் ஸ்குரு டிரைவரால் ஏ.டி.எம். எந்திரத்தை திறக்க முயற்சி செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் அந்த நபரை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதில் அவர் ஏ.டி.எம்.எந்திரத்தை பழுது பார்க்கும் நிறுவனத்தில் வேலை செய்வதாகவும், எந்திரத்தை சர்வீஸ் செய்ய வந்திருப்பதாகவும் தெரிவித்தார். சென்னையில் இருந்து வந்துள்ளதால், இரவோடு இரவாக பணியை முடித்து சென்றுவிட நினைத்து ஏ.டி.எம். எந்திரத்தை பழுது பார்த்ததாக தெரிவித்தார். எனினும் அவர் மீது சந்தேகம் தீராத போலீசார் வங்கி மேலாளரை தொடர்பு கொண்டு தெரிவித்தனர்.

இதையடுத்து நேற்று காலை வங்கி மேலாளர் போலீஸ் நிலையம் சென்று, போலீசாரின் பிடியில் இருந்த அந்த நபரை பார்த்து, ஏ.டி.எம். எந்திரத்தை பழுது பார்க்க வந்தவர் தான் என மேலாளர் உறுதி செய்தார். இதையடுத்து போலீசார் அந்த நபரை விடுவித்தனர். இந்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்