நாகையில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நாகையில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-06-12 23:00 GMT
நாகப்பட்டினம்,

கரூர் அரசு மருத்துவக்கல்லூரியில் பணிபுரிந்துவரும் செவிலியர்களுக்கு உள்ள கூடுதல் பணி சுமையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைக்காக கடந்த 5-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்திய, அரசு செவிலியர்கள் சங்க மாநில துணைத்தலைவர் நல்லம்மாள் உள்ளிட்ட 4 செவிலியர்களும், போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க சென்ற அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவரும், அனைத்து மருந்தாளுனர் சங்க மாநில தலைவருமான சுப்பிரமணியன் ஆகியோரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்த கரூர் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வரை கண்டித்தும், பணியிடை நீக்கத்தை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி, நாகை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட இணை செயலாளர் இளவரசன் தலைமை தாங்கினார். நாகை தொழிற்சங்க கூட்டமைப்பு பொது செயலாளர் மணி, மருத்துவ தேர்வு கழக செவிலியர் மேம்பாட்டு சங்க மாவட்ட தலைவர் ரேவதி, துணைத்தலைவர் ஜோதிமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அன்பழகன், மாவட்ட இணை செயலாளர் ராஜூ ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் வட்ட தலைவர் பாலசுப்பிரமணியன், ஓய்வூதியர் சங்க மாவட்ட பொருளாளர் ஆசைத்தம்பி, அரசு செவிலியர் சங்க மாவட்ட தலைவர் ஜீவானந்தம் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் ராணி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்