தியாகராயநகரில் பிரபல துணிக்கடையில் பட்டுசேலைகள் திருடிய வடமாநில பெண்கள் சிக்கினர்

தியாகராயநகரில் உள்ள பிரபல துணிக்கடையில் பட்டுசேலைகளை திருடிய வடமாநில பெண்கள் உள்பட 6 பேர் கொண்ட கும்பல் கையும் களவுமாக சிக்கியது.

Update: 2019-06-12 23:15 GMT
சென்னை,

சென்னை தியாகராயநகரில் உள்ள பிரபல துணிக் கடைக்கு வடமாநிலத்தை சேர்ந்த 6 பேர் கொண்ட கும்பல் வந்தது. விலை உயர்ந்த திருமண பட்டுசேலைகள் வேண்டும் என்று கடை ஊழியர்களிடம் அவர்கள் தெரிவித்தனர். உடனே கடை ஊழியர்கள், அவர்களிடம் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் உள்ள பட்டுசேலைகளை எடுத்து காண்பித்தனர்.

அப்போது ஊழியரின் கவனத்தை திசை திருப்பிய அந்த கும்பலில் இருந்த 2 பெண்கள், ரூ.1 லட்சத்து 73 ஆயிரம் மதிப்புள்ள பட்டு சேலை ஒன்றையும், ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பட்டுசேலையையும் திருடி தங்களது ஆடைக்குள் மறைத்து வைத்துக் கொண்டனர்.

3-வது சேலையை அவர்கள் திருடி, மறைத்து வைக்க முயற்சி செய்தபோது ஊழியர்கள் பார்த்து விட்டனர். பின்னர் கையும், களவுமாக அவர்கள் 6 பேரையும் பிடித்தனர்.

மேலும் கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவிலும் பட்டுசேலை திருடிய காட்சிகள் பதிவாகி இருந்தது.

இதுதொடர்பாக துணிக்கடை நிர்வாகம் சார்பில் பாண்டிபஜார் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பெண்கள் உள்பட 6 பேரை கைது செய்தனர்.

விசாரணையில் 6 பேரும் டெல்லி மேங்கல்புரி பகுதியை சேர்ந்த சுனிதா (வயது 26), பீனா(53), ஜோத்தி(48), ராம்குமார்(40), ரிங்கு சிங்(35), தீபம்சாலி(21) என்பது தெரிய வந்தது.

இவர்கள் டெல்லியில் இருந்து கார் மூலம் தமிழகத்துக்கு வந்து பல்வேறு துணிக் கடைகளில் விலை உயர்ந்த ஆடைகளை ‘அபேஸ்’ செய்திருப்பதும், குறிப்பாக விலை உயர்ந்த பட்டு சேலைகளை குறி வைத்து திருடி, அதனை டெல்லியில் துணிக்கடை வைத்து விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

அவர்கள் திருடிய பட்டு சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டது. திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட டெல்லி மாநில பதிவு எண் கொண்ட காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்