ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும்; என்.எல்.சி. முத்தரப்பு கூட்டத்தில் வலியுறுத்தல்

ஒப்பந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்யவேண்டும் என்று என்.எல்.சி. முத்தரப்பு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Update: 2019-06-12 23:00 GMT

புதுச்சேரி,

நெய்வேலியில் உள்ள என்.எல்.சி.யில் பணியாற்றி வரும் 2 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்யவேண்டும் என்ற கோரிக்கையை இதர பிற்படுத்தப்பட்ட ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இதுதொடர்பான முத்தரப்பு பேச்சுவார்த்தை புதுவையில் உள்ள தொழிலாளர் நல உதவி ஆணையர் அலுவலகத்தில் உதவி ஆணையர் கணேசன் முன்னிலையில் நேற்று நடந்தது. என்.எல்.சி. மனிதவள மேம்பாட்டு அதிகாரி உமாமகேஸ்வரன், தொழிற்சங்க பிரதிநிதிகள் வன்னியராஜா, வெங்கடேசன், சிவக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

அப்போது குறைந்தபட்சம் 2 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்யவேண்டும், ஒப்பந்த தொழிலாளர்கள் ஓய்வுபெறும் வயதை 60 ஆக உயர்த்த வேண்டும், 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை பதவி உயர்வு அளிக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

மேலும் தற்போது உள்ள நிலையில் 5 ஆயிரம் காலியிடங்கள் உள்ளது. இவற்றை நிரப்ப நிர்வாகம் முன்வரவேண்டும். அப்படி செய்தால் ஒப்பந்த தொழிலாளர்களின் கல்வி தகுதிக்கேற்ப பல்வேறு இடங்களில் பணி வழங்க வாய்ப்பு உள்ளது. பணி நியமனத்துக்கு காலதாமதப்படுத்தும்போது ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நிரந்தர தொழிலாளர்களின் கடைநிலை தொழிலாளியின் ஊதியத்தையும் மற்ற சலுகைகளையும் வழங்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுதொடர்பாக உதவி ஆணையரிடம் மனுவும் அளித்தனர்.

அதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக என்.எல்.சி. நிர்வாகம் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. மேலும் 2 ஆயிரம் தொழிலாளர்களை பணியில் அமர்த்துவது குறித்து ஜூலை மாதம் நல்ல தகவல் கிடைக்கும் என்றும் நிர்வாக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்