தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணி நேரம் நீட்டிப்பு: சேலம் கலெக்டர் அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகை

தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிநேரம் நீட்டித்ததை கண்டித்து சேலம் கலெக்டர் அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-06-14 21:30 GMT
சேலம், 

சேலம் செட்டிச்சாவடி பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் அந்த பகுதியில் உள்ள கரிகாலன் என்ற ஏரியில் தூர்வாரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு தினக்கூலியாக ரூ.130 வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த தொழிலாளர்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இதற்கிடையில் இவர்களுடைய பணி நேரத்தை அதிகாரிகள் நீட்டித்து விட்டதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக அதே கூலியில் காலை 8.30 மணி முதல் மாலை 5 மணி வரை வேலை பார்க்க வேண்டும் என்று தொழிலாளர்களை கட்டாயப்படுத்துவதாக தொழிலாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்தநிலையில் நேற்று காலை வேலைக்கு சென்ற 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அங்கு பணியில் ஈடுபடாமல் புறக்கணித்துவிட்டு சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். இதையடுத்து அவர்கள் பணிநேரம் நீட்டிப்பை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதைத்தொடர்ந்து அவர்களில் சிலர் மட்டும் கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று கலெக்டர் ரோகிணியை சந்தித்து மனு கொடுத்தனர். இதுகுறித்து தொழிலாளர்கள் கூறும் போது, ‘தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் மாதத்தில் 10 நாட்களுக்கு தான் வேலை கொடுக்கப்படுகிறது. அதிலும் தினக்கூலியை உயர்த்தி கொடுக்காமல் பணி நேரத்தை நீட்டிப்பு செய்து உள்ளனர். இதனால் நாங்கள் மிகவும் க‌‌ஷ்டப்பட்டு வருகிறோம். எனவே தினக்கூலியை உயர்த்துவதுடன் பணி நேரத்தை வழக்கம்போல் இருப்பதற்கு உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

மேலும் செய்திகள்