வரும் காலத்தில் ஜவ்வாதுமலை கோடை விழா நிரந்தர இடத்தில் நடத்தப்படும் கலெக்டர் பேச்சு
வரும் காலத்தில் ஜவ்வாதுமலை கோடை விழா நிரந்தர இடத்தில் நடத்தப்படும் என்று கலெக்டர் கந்தசாமி கூறினார்.;
திருவண்ணாமலை,
ஜவ்வாதுமலை கோடை விழா 2 நாட்கள் நடைபெற்றது. நேற்று முன்தினம் விழாவின் நிறைவு நாள் பரிசளிப்பு விழா நடந்தது. விழாவுக்கு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
கடந்த சில ஆண்டுகளாக நிரந்தர இடம் இல்லாமல், பல்வேறு இடங்களில் ஜவ்வாதுமலை கோடை விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஜமுனாமரத்தூர்-வேலூர் சாலையில் சுற்றுச்சூழல் பூங்கா அருகில் இடம் தேர்வு செய்யப்பட்டது. இந்த இடத்திற்கும், படகு குளத்திற்கும் எப்படி மக்கள் வருவார்கள் என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் எதிர்பார்த்ததை காட்டிலும் விழா நடைபெற்ற இடத்திலும், படகு குளம் இடத்திலும் பொதுமக்களின் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது.
அரசின் திட்டங்கள் குறித்து மலைவாழ் மக்கள், பொதுமக்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக இங்கு 50-க்கும் மேற்பட்ட துறைகளின் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது. ஜவ்வாதுமலை வாழ் மக்களின் பொருளாதாரம், கலாசாரம் ஆகியவற்றில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதற்காக கோடை விழா நடத்தப்பட்டு வருகிறது. மலையில் விளையும் சாமை, தினை, புளி, பலாப்பழம் ஆகியவை இங்கு கொண்டு வந்து சந்தைப்படுத்தி வருமானம் கிடைத்து மலைவாழ் மக்கள் பயன்பெறும் வகையில் இந்த ஆண்டும் கோடை விழா நடைபெற்றுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு புது முயற்சிகள், வெளி கலாசாரம், விளையாட்டுகள் மலைவாழ் மக்கள் மகிழ்விக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் பல்வேறு சாகச விளையாட்டுகள், லேசர் காட்சி, மேஜிக் நிகழ்ச்சி, குதிரை சவாரி போன்றவை நடத்தப்பட்டது.
மேலும், கூடுதலாக படகுகள் இயக்கப்பட்டதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் படகு சவாரி மேற்கொண்டனர். இனி வரும் காலத்தில் ஜவ்வாதுமலை கோடை விழா நடத்துவதற்கு 1,520 ஏக்கர் நிலம் அருகாமையில் தேர்வு செய்யப்பட்டு ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா போல் அமைக்கப்பட்டு நிரந்தர இடத்தில் நடத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
ஜவ்வாதுமலையில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் ரூ.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மலையில் உள்ள பள்ளிகளுக்கு உள்ளூரில் தகுதியுள்ள நபர்கள் ஆசிரியர்களாக நியமிக்கவும், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், மாதிரி பள்ளிகள் உருவாக்கவும், தனியார் பள்ளிகளுக்கு இணையாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மலைவாழ் மக்களுக்கு அனைத்து தரப்பிலும் வளர்ச்சி ஏற்பட வேண்டும் என்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. மலைவாழ் மக்கள், சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் ஜவ்வாதுமலை கோடை விழாவிற்கு தரும் ஆதரவினை பார்க்கும் போது அடுத்த ஆண்டு இதைவிட சிறப்பாக நடத்திட உத்வேகம் ஏற்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
இதனையடுத்து ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் திட்டம் சார்பாக நடத்தப்பட்ட கொழு, கொழு குழந்தை போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசும், சுற்றுலாத்துறை சார்பில் நடந்த படகு மற்றும் வாத்து பிடிக்கும் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, கோப்பையும், கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக நடத்தப்பட்ட நாய் கண்காட்சியில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் ஸ்ரீநாராயணி பீடத்தின் கபாலி என்ற நாய்க்கு பரிசு, கோப்பை வழங்கப்பட்டது.
நாய்கள் கண்காட்சியில் முதல் 3 இடங்கள் பெற்ற நாய்களின் உரிமையாளர்களுக்கும், ஆறுதல் பரிசு பெற்ற உரிமையாளர்களுக்கும் பரிசு, கோப்பை மற்றும் பாராட்டு சான்றிதழை கலெக்டர் கந்தசாமி வழங்கினார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் முதல் 3 இடங்களை பெற்றவர்களுக்கு 45 ஆயிரத்து 600 ரூபாய் பரிசு தொகையையும் வழங்கினார்.
கோடை விழாவில் அரசின் திட்டங்கள் குறித்து வைக்கப்பட்டு இருந்த அனைத்து அரசு துறைகளுக்கும் நினைவுப்பரிசு, கோப்பை வழங்கப்பட்டது. மேலும் சிறந்த முறையில் அரங்கம் அமைத்ததற்காக தோட்டக்கலைத்துறைக்கு முதல் பரிசுக்கான கோப்பையை கலெக்டர் கந்தசாமி வழங்கினார்.
விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வி.பன்னீர்செல்வம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா, ஆரணி உதவி கலெக்டர் மைதிலி, அனைத்து துறை அரசு அலுவலர்கள், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள், மலைவாழ் மக்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.