தஞ்சை ராசாமிராசுதார் அரசு மருத்துவமனையில் 8 திருநங்கைகள், காவலாளியாக நியமனம்

தஞ்சை ராசாமிராசுதார் அரசு மருத்துவமனையில் முதல் முறையாக 8 திருநங்கைகள் காவலாளியாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2019-06-21 22:15 GMT
தஞ்சாவூர், 

தஞ்சை ராசாமிராசுதார் அரசு மருத்துவமனைக்கு தஞ்சை மாவட்டம் மட்டுமின்றி திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இதனால் பகல் மட்டுமின்றி இரவு நேரங்களிலும் மருத்துவமனையில் மக்கள் கூட்டம் அதிகமாகவே இருக்கும்.

இங்கு பாதுகாப்பு பணியில் தனியார் நிறுவனத்தின் காவலாளிகள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்த மருத்துவமனையில் மகப்பேறு வார்டில் காவலர் பணிக்கு முதன் முறையாக 8 திருநங்கைகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான ஆணையை மருத்துவக்கல்லூரி முதல்வர் குமுதா லிங்கராஜ் நேற்று வழங்கினார்.

திருநங்கைகள் ராகினி, சத்யா, தர்ஷினி, மயில், பாலமுரளி, முருகானந்தம், ராஜேந்திரன், மணிவண்ணன் ஆகியோர் மகப்பேறு வார்டில் காவலாளிகளாக ஒரு ஷிப்டில் 4 பேர் வீதம் 2 ஷிப்டிலும் 8 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். அரசு மருத்துவமனைகளில் திருநங்கைகள் காவலாளிகளாக நிமயனம் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.

இது குறித்து திருநங்கைகள் கூறும்போது, எங்களை ஒதுக்கி வைக்கும் சூழ்நிலையில் எங்களுக்கு மருத்துவமனையில் காவலாளியாக பணி வழங்கியது பெருமை அளிக்கிறது. இதேபோல் மற்ற துறைகளிலும் திருநங்கைகளுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்றனர்.மருத்துவக்கல்லூரி முதல்வர் குமுதா லிங்கராஜ் கூறும்போது, இவர்கள் நன்றாக பணி செய்கிறார்களா? என பயிற்சி அளித்தோம். அனைவரும் நன்றாக பணி புரிந்ததால் காவலாளியாக பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. ஒப்பந்த அடிப்படையில் ரூ.6,500 ஊதியத்தில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அரசு மருத்துவக்கல்லூரிகளில் காவலாளியாக திருநங்கைகள் நியமனம் செய்யப்படுவது தஞ்சையில் தான் முதல் முறையாகும் என்றார்.

மேலும் செய்திகள்