மாயமான மீனவர்களை தேடுவதில் மெத்தனம்: மீன்துறை அலுவலகத்தில் சமையல் செய்து பெண்கள் நூதன போராட்டம்

மாயமான மீனவர்களை தேடுவதில் மெத்தனம் காட்டுவதாக கூறி, மீன்துறை அலுவலகத்தில் பெண்கள் சமையல் செய்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-06-21 22:30 GMT
திருவொற்றியூர்,

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து பைபர் படகில் கடந்த 4-ந்தேதி கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற காசிபுரத்தை சேர்ந்த மீனவர்கள் புகழேந்தி (வயது 59) மதி(48) உள்பட 7 பேர் மாயமானார்கள்.

ஆந்திர மாநில கடலோரத்தில் அவர்கள் சென்ற பைபர் படகு கவிழ்ந்து கிடந்தது. அவர்களின் நிலை என்ன? என்பது இன்னும் தெரியவில்லை. மாயமான மீனவர்களை கடலோர காவல்படையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

ஆனால் மாயமான மீனவர்களை தேடுவதில் அரசு மெத்தனம் காட்டுவதாக கூறி மாயமான மீனவர்களின் குடும்பத்தை சேர்ந்த பெண்கள், காசிமேடு மீன்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை நேற்று மதியம் முற்றுகையிட்டு சமையல் செய்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கிருந்த ஊழியர்களையும் சிறை பிடித்தனர்.

இது குறித்து மீனவ பெண்கள் கூறும்போது, “மீனவர்கள் மாயமாகி பல நாட்கள் ஆகியும் அவர்களை தேடுவதில் அரசு அக்கறை காட்டவில்லை. கண் துடைப்புக்காக படகு கவிழ்ந்த புகைப்படத்தை மட்டும் காட்டியது. படகை திருப்பி பார்த்தால் மீனவர்களின் நிலை தெரிய வரலாம். பலமுறை படகை பார்க்க கூறியும் பலத்த காற்று வீசுவதால் படகின் அருகில் செல்ல முடியவில்லை என அரசு விளக்கம் அளித்து ஏமாற்றி வருகிறது. மாயமான மீனவர்கள் குறித்த விவரங்களை உடனே எங்களுக்கு தெரியப்படுத்தாவிட்டால் 7 பேர் குடும்பத்தினரும் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வோம்” என்றனர்.

மேலும் செய்திகள்