விருத்தாசலம், அரசு மருத்துவமனையில் சி.டி.ஸ்கேன் மையம் - அமைச்சர் எம்.சி.சம்பத் தொடங்கி வைத்தார்

விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் புதிய சி.டி.ஸ்கேன் மையத்தை அமைச்சர் எம்.சி.சம்பத் தொடங்கி வைத்தார்.

Update: 2019-06-24 22:15 GMT
கடலூர்,

விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் 182 படுக்கை உள்ளது. இந்த மருத்துவமனைக்கு இப்பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். குறிப்பாக சாலை விபத்து மற்றும் பிற விபத்துகளில் பாதிக்கப்படும் பொதுமக்கள், சிகிச்சை பெற போதிய புதிய தொழில்நுட்ப கருவி, குறிப்பாக சி.டி.ஸ்கேன் இல்லாத காரணத்தினால் அருகிலுள்ள மாவட்டமான விழுப்புரம் மற்றும் புதுச்சேரி மாநிலத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டு வருகிறார்கள்.

இதனால் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சி.டி.ஸ்கேன் அமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஆண்டு சி.ஆர்.எம். ஆய்வுக்குழு இந்த அரசு மருத்துவமனையை ஆய்வு செய்தது. ஆய்வில் விபத்து மற்றும் பிற விபத்துகளில் பாதிக்கப்பட்டு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஆண்டறிக்கையின் மூலம் இந்த குழு உறுதி செய்தது.

இதனால் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு ஒரு புதிய சி.டி.ஸ்கேன் தேவை என தீர்மானித்தது. இதையடுத்து தமிழ்நாடு மருத்துவ சேவைக்கழகம் மூலம் ரூ.1 கோடியே 74 லட்சம் மதிப்புள்ள சி.டி.ஸ்கேன் மையம் அமைக்க உத்தர விட்டது.

இதன்படி சி.டி.ஸ்கேன் மையம் அமைக்கப்பட்டது. மின் இணைப்புக்கு ரூ.4.8 லட்சம் கலெக்டர் நிதி உதவி அளித்தார். இதைத்தொடர்ந்து இந்த சி.டி.ஸ்கேன் மையம் திறப்பு விழா நேற்று முன்தினம் அரசு மருத்துவமனையில் நடந்தது.

விழாவுக்கு கலெக்டர் அன்புசெல்வன் தலைமை தாங்கினார். விழாவில் அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்து கொண்டு புதிய சி.டி.ஸ்கேன் மையத்தை தொடங்கி வைத்தார். விழாவில் விருத்தாசலம் சப்-கலெக்டர் பிரசாந்த், நலப்பணிகள் இணை இயக்குனர் கலா, விருத்தாசலம் அரசு மருத்துவமனை மருத்துவர் சாமிநாதன், தாசில்தார் கவியரசு, டாக்டர்கள் நவநீதம், சாதிக் பாஷா, கோவிந்தமுருகன், பாலமுருகன், அ.தி.மு.க. நகர செயலாளர் சந்திரகுமார், ஒன்றிய செயலாளர்கள் பச்சமுத்து, பாலதண்டாயுதம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்