குடிப்பதற்கு பணம் கொடுக்காததால் ஆத்திரம், மனைவியை அடித்து கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

கோவை அருகே குடிப்பதற்கு பணம் கொடுக்காததால் மனைவியை அடித்து கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பளித்தது.

Update: 2019-06-25 22:15 GMT
கோவை,

கோவை மாவட்டம் சிறுமுகை ஜீவா நகரை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 51). தொழிலாளி. இவர் கடந்த 2007-ம் ஆண்டில் சுப்புலட்சுமி (41) என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். சுப்புலட்சுமி அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் மில்லில் வேலை செய்து வந்தார்.

வேல்முருகன் அடிக்கடி வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். அத்துடன் வேலைக்கு சென்றால் கிடைக்கும் சம்பளத்தை குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். மேலும் வீட்டில் இருக்கும்போது மனைவியிடம் குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் 20-ந் தேதி வேல்முருகன் வீட்டில் இருந்தார். சுப்புலட்சுமி வேலைக்கு சென்று வீடு திரும்பினார். அவரிடம் வேல்முருகன் குடிப்பதற்காக பணம் கேட்டார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த வேல்முருகன், சுப்புலட்சுமியை கீழே தள்ளி அவருடைய தலையை தரையில் வேகமாக அடித்தார். இதில் படுகாயம் அடைந்த சுப்புலட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து வேல்முருகனை கைது செய்தனர்.

இந்த கொலை தொடர்பான வழக்கு விசாரணை கோவை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிந்ததை தொடர்ந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி குற்றம் சாட் டப்பட்ட வேல்முருகனுக்கு ஆயுள் தண்டனையும் ரூ.1000 அபராதமும் விதித்து நீதிபதி குணசேகரன் தீர்ப்பளித்தார். இதையடுத்து போலீசார் வேல்முருகனை பலத்த பாதுகாப்புடன் அழைத்துச்சென்று கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்