விக்கிரவாண்டி அருகே, குடிநீர் கேட்டு பொதுமக்கள் தர்ணா

விக்கிரவாண்டி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-07-04 23:00 GMT
விக்கிரவாண்டி,

விக்கிரவாண்டி அருகே உள்ள ராதாபுரம் கிராமத்தில் கடந்த 2 மாதங்களாக குடிநீர் பிரச்சினை நிலவி வந்தது. இதுதொடர்பாக பொதுமக்கள் அடிக்கடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தை தொடர்ந்து கடந்த மாதம் 30-ந் தேதியன்று விக்கிரவாண்டி வட்டார வளர்ச்சி அதிகாரிகள் எடுத்த நடவடிக்கையின் மூலம் புதிதாக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, அதன் மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு வினியோகம் செய்யப்பட்டது.

இருப்பினும் இதன் மூலம் கிடைக்கும் தண்ணீர் போதுமானதாக இல்லாததால் பொதுமக்கள் அவதியடைந்தனர். எனவே கூடுதலாக ஆழ்துளை கிணறு அமைத்து, குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் பொதுமக்கள் முறையிட்டு வந்தனர். ஆனால் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலை காலி குடங்களுடன் கிராம நிர்வாக அலுவலகம் அருகே திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் தரையில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி கோ‌‌ஷம் எழுப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அறவாழி, நாராயணன், விக்கிரவாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சங்கரசுப்பிரமணியன், சேதுராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது கூடுதலாக ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் பிரச்சினையை தீர்க்க விரைவில் நடவடிக்கை எடுப்பதாக வட்டார வளர்ச்சி அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனை ஏற்ற பொதுமக்கள் அனைவரும் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்