கூட்டுறவு வங்கி செயலாளர்களை பணியிட மாற்றம் செய்யக்கூடாது அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கூட்டுறவு வங்கிகளில் செயலாளர்களை பணியிட மாற்றம் செய்யும் திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி பணியாளர் சங்கத்தை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-07-08 22:45 GMT
திருவண்ணாமலை, 

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன் நேற்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையொட்டி அவர்கள் வேங்கிக்காலில் உள்ள மின்வாரிய அலுவலகத்திலிருந்து ஊர்வலமாக புறப்பட்டனர். ஊர்வலம் கலெக்டர் அலுவலகத்தை அடைந்ததும் அங்கு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய மாவட்ட தலைவர் சம்பத்ராவ் பேசியதாவது:-

தமிழகம் முழுவதும் 4 ஆயிரத்து 500 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளன. இங்கு பணிபுரிந்து வரும் செயலாளர்களை தமிழக அரசு பொது பணி நிலைத் திறன் அடிப்படையில் மாவட்ட அளவில் பணியிட மாற்றம் செய்யும் வகையில் அரசாணை வழங்கியுள்ளது. அதன்படி செயலாளர்களை பணியிட மாற்றம் செய்திட அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

ஆனால் இந்த திட்டத்தால் செயலாளர்களுக்கு இன்னல்கள் ஏற்படும். எனவே இன்னல்கள் குறித்தும், சங்கத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அரசு கவனத்தில் எடுத்து கொண்டு பணியிட மாற்றம் செய்யும் திட்டத்தை கைவிட வேண்டும்.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பணிபுரியும் விற்பனையாளர்கள் மற்றும் பிற அலுவலக பணியாளர்கள் சுமார் 10 முதல் 20 ஆண்டுகள் பணிபுரிந்தும் பதவி உயர்வுக்கு வாய்ப்பில்லாமல் பணியாற்றி வருகின்றனர். பொது பணிநிலைத் திறன் அமல்படுத்தினால் முற்றிலும் பதவி உயர்வுகள் பாதிக்கும் நிலைய உள்ளது. எனவே ஆண்டுக் கணக்கில் பணிபுரிந்து வரும் பணியாளர்கள், அலுவலர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்