தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு அடுத்தடுத்து நடந்த ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு

தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு வெவ்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்தடுத்து நடந்த ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-07-08 22:45 GMT
தேனி,

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மனு அளிக்க வந்த இடத்தில் சிலர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். அந்த வகையில் நேற்று ஒரே நாளில் 3 ஆர்ப்பாட்டங்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்தது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தேனி தாலுகா செயலாளர் சடையாண்டி, இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் நாகராஜ் ஆகியோர் தலைமையில் வீரபாண்டியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆக்கிரமிப்பாளர்கள் என்று வீடுகள் இடிக்கப்பட்டு, மாற்று இடத்துக்கு பட்டா வழங்கிய நிலையில் இடம் வழங்கவில்லை என்று கூறி அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது அவர்கள், ‘பட்டா இங்கே... இடம் எங்கே?’ என்ற கோ‌‌ஷத்தை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட சிலர் இந்த கோ‌‌ஷம் எழுதப்பட்ட பதாகைகளை தோளில் தொங்கவிட்டு இருந்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து அவர்கள் கலெக்டர் பல்லவி பல்தேவிடம் அளித்த மனுவில், ‘வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் அருகில் 40 ஆண்டுகளாக குடியிருந்து வந்தோம். எங்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று கூறி வீடுகளை இடித்து விட்டனர். மாற்று இடம் தருவதாக கூறி தேனி தாசில்தார் மூலம் பட்டா வழங்கப்பட்டது. ஆனால், இடம் எங்கு இருக்கிறது என்று காண்பிக்கவில்லை. எனவே, இடத்தை எங்களுக்கு ஒப்படைக்க வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.

இந்து எழுச்சி முன்னணி மாவட்ட தலைவர் ராமராஜ் தலைமையில் நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது அவர்கள் கையில் குண்டு பல்புகளை வைத்துக் கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் ஒரே மாதிரியான மின்சார கட்டணம் வசூலிக்க வேண்டும் என்றும், விதிகளை மீறும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கோ‌‌ஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து அவர்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில், ‘மாவட்டம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்து வழிபாட்டு தலங்கள் உள்ளன. கோவில்களுக்கு ஒரு யூனிட் மின்சாரத்துக்கு ரூ.8 வீதம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் அனுமதியின்றி வீடுகளில் செயல்படும் சில வழிபாட்டு தலங்கள், பிரார்த்தனை கூட்டங்கள் நடத்தும் இடங்களுக்கு வீடுகளுக்கு வழங்கப்படும் ஒரு யூனிட்டுக்கு ரூ.1.50 வீதம் மின்கட்டணம் செலுத்துகின்றனர்.

இதனால், மின்வாரியத்துக்கு மாதந்தோறும் பல லட்சம் ரூபாய் இழப்பாகிறது. எனவே எந்த மத வழிபாட்டு தலமாக இருந்தாலும் அரசு விதித்துள்ள கட்டண விதிமுறைப்படி மின்கட்டணம் செலுத்துமாறு வலியுறுத்த வேண்டும். மேலும் வழிபாட்டு தலங்களில் ஆய்வு செய்து விதிமீறல்களை கண்டறிந்து அபராதம் வசூலிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.

பெண்கள் விடுதலைக்கழகத்தை சேர்ந்தவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில், பாலியல் வன்கொடுமை, பெண்கள் வன்கொடுமை குறித்து புகார்கள் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழிப்பதாகவும், அங்கு பணியாற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு பொதுச்செயலாளர் தமிழரசி தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌‌ஷங்கள் எழுப்பினர்.

அடுத்தடுத்து நடந்த ஆர்ப்பாட்டத்தால் கலெக்டர் அலுவலகத்தின் முன்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

மேலும் செய்திகள்