திருவண்ணாமலையில் பரிதாபம் மண் குவியலில் விளையாடிய சிறுவன் மின்சாரம் தாக்கி பலி - பிணத்துடன் உறவினர்கள் சாலை மறியல்

திருவண்ணாமலையில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெறும் இடம் அருகே மண் குவியலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தான்.;

Update:2019-07-10 04:15 IST
திருவண்ணாமலை,

திருவண்ணாமலை திண்டிவனம் சாலையில் ரெயில்வே இருப்புப் பாதைக்கு அருகில் ரூ.30 கோடியே 38 லட்சம் மதிப்பில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் தண்டவாளத்திற்கு கிழக்கே பூர்வாங்க பணிகள் முடிவுற்ற நிலையில் தண்டவாளத்திற்கு மேற்கே தாசில்தார் அலுவலக நுழைவு வாயில் வரை மேம்பாலம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

இதனால் திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதற்காக தண்டவாளத்தின் மேற்கு பகுதியில் பள்ளங்கள் தோண்டப்பட்டு பில்லர்கள் அமைக்கப்பட்டு உள்ளன. பள்ளங்களில் இருந்து எடுக்கப்பட்ட மண் அந்த பகுதியில் குவியலாக குவிக்கப்பட்டு உள்ளது.

இதில் சில சமயங்களில் அந்த பகுதியை சேர்ந்த சிறுவர், சிறுமிகள் விளையாடுகின்றனர். திருவண்ணாமலை ரெயில் நிலையம் அருகில் உள்ள தியாகி அண்ணாமலை நகர் பகுதியை சேர்ந்தவர் வேடியப்பன், கூலி தொழிலாளி. இவரது மனைவி செல்லம்மாள் என்ற அன்புமலர். இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று காலை வேடியப்பனின் 2-வது மகன் ரகுநாத் (வயது 9) திருவண்ணாமலையில் இருந்து திருக்கோவிலூர் செல்லும் சாலையின் முனைப்பகுதியில் உள்ள உயர்மின் கோபுரத்தின் அருகில் குவித்து வைக்கப்பட்டு இருந்த மண் மீது ஏறி விளையாடி கொண்டிருந்தான். அப்போது ரகுநாத் உயர்மின் கோபுரம் பக்கம் உள்ள சரிவில் வழுக்கி விழுந்தான். அங்கு அறுந்து கிடந்த மின்வயர் மீது அவன் விழுந்ததாக தெரிகிறது. இதில் மின்சாரம் தாக்கி அவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.

இதனை கண்ட அவரது தாய் அன்புமலர் வேகமாக ஓடி சென்று ரகுநாத்தை தொட்டு உள்ளார். அவர் மீதும் மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டார். பின்னர் அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். தொடர்ந்து மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அந்த பகுதியில் மின்நிறுத்தம் செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் சிறுவன் உடலை மீட்டனர். சிறுவன் இறந்ததை பார்த்து ரகுநாத்தின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது காண்போர் கண்களை கலங்க வைத்தது.

பின்னர் ரகுநாத்தின் பிணத்துடன் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள், அந்த பகுதி மக்கள் சுமார் காலை 8 மணியில் இருந்து திருவண்ணாமலை தாலுகா அலுவலகம் அருகில் உள்ள பெரியார் சிலை அருகில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை கிழக்கு போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால் அவர்கள் பேச்சுவார்த்தைக்கு உடன்படாமல் தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் போக்குவரத்து மாற்றம் செய்து அந்த வழியாக வந்த வாகனங்களை மாற்றுப் பாதையில் அனுப்பி வைத்தனர்.

பின்னர் திருவண்ணாமலை டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியதை தொடர்ந்து அவர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.

இதையடுத்து ரகுநாத்தின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து போலீசார் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

மேலும் உயர் மின்கோபுரத்தில் இருந்த வயர் அறுந்து கிடந்து மின்கசிவு ஏற்பட்டதா? அல்லது அந்த பகுதியில் வேறு ஏதாவது இடத்தில் இருந்து மின்கசிவு வந்ததா? என்று போலீசார் சோதனை செய்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்