குன்னூரில், ஆசிரியை வீட்டில் 16 பவுன் நகை, ½ கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை - நள்ளிரவில் மர்மநபர்கள் கைவரிசை

குன்னூரில் ஆசிரியை வீட்டுக்குள் மர்மநபர்கள் புகுந்து 16 பவுன் நகை மற்றும் ½ கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

Update: 2019-07-11 22:45 GMT
ஆண்டிப்பட்டி,

தேனி மாவட்டம், க.விலக்கு போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட குன்னூர் கிராமத்தில் தேனி-மதுரை மெயின்ரோட்டில் வசித்து வருபவர் அசோகன்(வயது 42). இவர் ஆண்டிப்பட்டியில் கியாஸ் ஏஜென்சி நடத்தி வருகிறார். இவருடைய மனைவி ‌ஷீலாபிரியா. இவர் விழுப்புரத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவர்கள் தேனியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். ‌ஷீலாபிரியா வெளியூரில் வேலை செய்த காரணத்தால், அசோகன் தனது குழந்தைகளுடன் குன்னூரில் வசித்து வருகிறார்.

அசோகன் வேலை வி‌‌ஷயமாக கோவைக்கு சென்றார். அதையொட்டி குழந்தைகளை அதே பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் தங்க வைத்துவிட்டு சென்றார்.

இந்நிலையில் அசோகன் வீட்டில் யாரும் இல்லாததை மர்மநபர்கள் நோட்டமிட்டுள்ளனர். இதையடுத்து நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் அவர்கள் வீட்டில் பீரோவில் வைத்திருந்த 16 பவுன் நகைகள் மற்றும் ½ கிலோ எடையுள்ள வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.

நேற்று காலையில் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அக்கம்பக்கத்தினர் அசோகனுக்கு தகவல் தெரிவித்தனர். இவர் இதுகுறித்து செல்போனில் க.விலக்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. மோப்பநாய் வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடியபின் நின்றுவிட்டது. மேலும் வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகள் பதிவு செய்யப்பட்டது.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து க.விலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். பூட்டிய வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் குன்னூர் பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்