பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

Update: 2019-07-12 22:30 GMT
பவானிசாகர்,

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக இருப்பது பவானிசாகர் அணை ஆகும். இந்த அணையின் மொத்த உயரம் 120 அடி. இதில் சகதி 15 அடி கழித்து மொத்த 105 அடிக்கு தண்ணீரை தேக்கி வைக்கலாம். இந்த அணையில் இருந்து பவானி ஆற்றின் மூலம் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காலிங்கராயன் வாய்க்கால் பாசனப் பகுதியில் சுமார் 50 ஏக்கர் விவசாய நிலங்களும், கீழ்பவானி பாசன வாய்க்கால் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கம் விவசாய நிலங்களும் பாசன வசதி பெறுகிறது.

பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில மாதங்களாக பருவமழை பொய்த்ததால், அணையின் நீர்மட்டம் நாள்தோறும் படிப்படியாக குறைந்து வந்தது. இது ஈரோடு மாவட்ட விவசாயிகளுக்கு வேதனையை தந்தது. மேலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவானது.

இந்த நிலையில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் குந்தா, அவலாஞ்சி, மேல் பவானி, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது.

நேற்றுமுன்தினம் மாலை 4 மணி அளவில் அணைக்கு வினாடிக்கு 482 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நேற்று மாலை 4 மணி அளவில் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 2,150 கன அடியாக அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டமும் படிப்படியாக உயரத் தொடங்கியது. அப்போது அணையின் நீர்மட்டம் 58.73 அடியாக உயர்ந்தது. அணையிலிருந்து வினாடிக்கு பவானி ஆற்றுக்கு 200 கனஅடி தண்ணீரும், கீழ்பவானி வாய்க்காலுக்கு வினாடிக்கு 5 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதாலும், அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாலும், ஈரோடு மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்