தந்தை-அண்ணனை தாக்கிய வாலிபரை கைது செய்ய சென்ற போலீசார் மீது தாக்குதல் - போடி அருகே பரபரப்பு

போடி அருகே தந்தை- அண்ணனை தாக்கிய வாலிபரை கைது செய்ய போலீசார் சென்றனர். அப்போது போலீசாரை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2019-07-12 23:00 GMT
போடி,

போடியை அடுத்த மேலச்சொக்கநாதபுரம் வடக்கு ராஜ வீதியை சேர்ந்தவர் ஒண்டிவீரன் (வயது 54). இவரது மகன் பூமிநாதன் (24). இவர் அடிக்கடி மற்றவர்களுடன் தகராறில் ஈடுபட்டு வந்தார். எனவே கடந்த 10-ந்தேதி பூமிநாதனை ஒண்டிவீரன் கண்டித்துள்ளார்.

இதில் தந்தை, மகனுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது பூமிநாதன் ஆத்திரம் அடைந்து தந்தையை கம்பால் தாக்கியுள்ளார். மேலும் இதை விலக்கிவிட வந்த அண்ணன் கணேசனையும் தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த இருவரும் போடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து போடி தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது.

இதையடுத்து நேற்று முன்தினம் இரவு பூமிநாதனை கைது செய்வதற்காக சப்-இன்ஸ்பெக்டர்கள் தீபக், முருகேசன், போலீஸ்காரர் ரத்தின்குமார் உள்பட போலீசார் மேலசொக்கநாதபுரத்துக்கு சென்றனர். போலீசாரை பார்த்ததும் பூமிநாதன் அங்கிருந்து தப்ப முயன்றார். உடனே போலீசார் அவரை பிடிக்க முயன்றனர். அப்போது போலீஸ்காரர் ரத்தின்குமாரின் செல்போனை பிடுங்கி கீழே வீசி சேதப்படுத்தியதுடன் அவரையும், சப்-இன்ஸ்பெக்டர் முருகேசனையும் கம்பால் தாக்கினார். இதை அப்பகுதியை சேர்ந்த அழகர்சாமி என்பவர் விலக்க முயன்றார். அப்போது அவரையும் பூமிநாதன் கம்பால் தாக்கினார். இதையடுத்து காயம் அடைந்த 3 பேரும் போடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

பின்னர் போலீசார் பூமிநாதனை மடக்கிப்பிடித்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் செய்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பூமிநாதனை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்