ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க உதவுவது போல் நடித்து பலரிடம் நூதன மோசடி செய்த பெண் கைது

ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க உதவுவது போல் நடித்து பலரிடம் நூதன முறையில் பல லட்ச ரூபாய் மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டார்.

Update: 2019-07-13 22:30 GMT
மதுரை,

மதுரை செல்லூர், தாகூர்நகர் மெயின்ரோட்டை சேர்ந்தவர் மாரிமுத்து(வயது 72). இவர் சம்பவத்தன்று கோரிப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சென்றார். அப்போது அவரது ஏ.டி.எம். கார்டு எந்திரத்தில் சிக்கி கொண்டதால் அதனை எப்படி எடுப்பது என்பது தெரியாமல் திகைத்து போய் நின்று கொண்டிருந்தார். அந்த நேரத்தில் அவரது பின்னால் நின்று கொண்டிருந்த பெண் ஒருவர் அவருக்கு உதவ வந்தார். மேலும் அந்த பெண் ஏ.டி.எம். கார்டின் ரகசிய எண்ணை தெரிவித்தால் தான் கார்டை வெளியே எடுக்க முடியும் என்று கூறினார். அதை நம்பிய மாரிமுத்து ரகசிய எண்ணை தெரிவித்தார். அந்த எண்ணை வைத்து அந்த பெண், மாரிமுத்து வங்கிக்கணக்கில் பணம் எவ்வளவு உள்ளது என்பதை அறிந்து கொண்டார். பின்னர் அவரிடம் ஏ.டி.எம். கார்டை கொடுத்து அந்த பெண் அனுப்பி வைத்தார்.

மாரிமுத்து வீட்டிற்கு சென்ற உடன் அவரது செல்போன் எண்ணிற்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் மேலமாசி வீதியில் உள்ள நகைக்கடையில் நகை வாங்கியதால் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சம் பணம் எடுக்கப்பட்டதாக இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் விளக்குத்தூண் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்க்கும் தனது மகன் கணேசமூர்த்திக்கு தகவல் தெரிவித்தார். உடனே அவர் அந்த நகைக்கடைக்கு விரைந்து சென்று தனது தந்தை வங்கிக்கணக்கில் இருந்து ரூ.1 லட்சம் பணம் எடுத்தது குறித்து விசாரித்தார்.

அப்போது கடை ஊழியர்கள், பெண் ஒருவர் ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்திற்கு நகை வாங்கி ஏ.டி.எம். கார்டை கொடுத்தார். அதில் ரூ.1 லட்சம் ஸ்வைப் செய்து மீதி பணத்தை ரொக்கமாக செலுத்துமாறு கூறினோம். உடனே அவர் நகையை வைத்து விட்டு மீதி தொகையாக அருகில் உள்ள ஏ.டி.எம்.மில் இருந்து எடுத்து வருவதாக கூறி சென்றார் என்று ஊழியர்கள் தெரிவித்தனர். அதை தொடர்ந்து போலீஸ்காரர் கணேசமூர்த்தி கடையில் மறைந்து நின்று கொண்டார். அப்போது அந்த பெண் ரூ.8 ஆயிரத்துடன் நகையை வாங்க வந்தார். அந்த நேரத்தில் போலீஸ்காரர் மற்றும் கடை ஊழியர்கள் சேர்ந்து அந்த பெண்ணை சுற்றி வளைத்து பிடித்து திலகர்திடல் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், அந்த பெண் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சீதாலட்சுமி(40) என்பதும், இவர் ஏ.டி.எம்.மிற்கு பணம் எடுக்க வரும் முதியவர்களுக்கு உதவி செய்வது போல் நடித்து பணத்தை திருடுவதும் தெரியவந்தது. அவர் இதுபோன்று பலரிடம் பல லட்ச ரூபாய் மோசடி செய்துள்ளார். இவர் மீது திலகர்திடல், ஒத்தக்கடை, மேலூர் உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளது. சீதாலட்சுமி திருடும் ஏ.டி.எம்.கார்டு மூலம் நகையை மட்டும் தான் வாங்குவாரம். இவ்வாறு தான் மாரிமுத்துவிடம் பணத்தை மோசடி செய்து நகை வாங்கியபோது கையும், களவுமாக சிக்கியுள்ளார்.

இதைடுத்து சீதாலட்சுமியை கைது செய்த போலீசார், பணம், நகை மற்றும் பல்வேறு வங்கிகளின் ஏ.டி.எம்.கார்டுகளை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்