சிறுவன் கழிவுநீரில் அடித்து செல்லப்பட்ட சம்பவம்: சாக்கடையை திறந்து வைத்தவர் மீது வழக்குப்பதிவு மேயர் பதவி விலக வலியுறுத்தி பொதுமக்கள் பேரணி

கோரேகாவில் சிறுவன் கழிவுநீரில் அடித்து செல்லப்பட்ட சம்பவத்தில், சாக்கடையை திறந்து வைத்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Update: 2019-07-13 22:45 GMT
மும்பை,

கோரேகாவில் சிறுவன் கழிவுநீரில் அடித்து செல்லப்பட்ட சம்பவத்தில், சாக்கடையை திறந்து வைத்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த துயர சம்பவத்துக்கு பொறுப்பேற்று மேயர் பதவி விலகக்கோரி பொதுமக்கள் பேரணி நடத்தினர்.

சாக்கடையில் விழுந்த சிறுவன்

மும்பை கோரேகாவ் கிழக்கு அம்பேத்கர் சவுக் பகுதியை சேர்ந்தவர் சூரத் சிங். இவரது மனைவி சந்தியா. இவர்களுக்கு சோனாலி என்ற மகளும், சித்தாந்த், திவ்யான்ஷ் ஆகிய 2 மகன்களும் உண்டு.

3 வயதான திவ்யான்ஷ் கடந்த 10-ந் தேதி இரவு அங்கு திறந்து கிடந்த சாக்கடைக்குள் விழுந்து விட்டான். நெஞ்சை பதற செய்யும் இந்த காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமரா மூலம் வெளிச்சத்துக்கு வந்தது.

அவன் கழிவுநீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த சம்பவத்தை அடுத்து சாக்கடையை திறந்து வைத்து அலட்சியமாக இருந்த மாநகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மேயர் பதவி விலக வேண்டும் என அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சாக்கடையில் விழுந்த சிறுவனை தேடும் பணியில் மாநகராட்சியினர் தீவிரமாக ஈடுபட்டனர். ஆனால் அவர்களால் சிறுவனை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு சிறுவனை தேடும் பணி நிறுத்தப்பட்டது.

வழக்குப்பதிவு

இந்தநிலையில் சிறுவன் விழுந்த பகுதியில் இருந்த சாக்கடையை திறந்து வைத்த மர்ம நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கடந்த 1-ந் தேதி சிறுவன் விழுந்த பகுதியில் சாக்கடை மூடப்பட்டது. எனவே அதன்பிறகு தான் மர்ம நபர் அதை திறந்து உள்ளார். சாக்கடையை திறந்து வைத்தது யார்? என்பதை கண்டுபிடிக்க அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்’’ என்றார்.

இந்த சம்பவம் குறித்து மாநகராட்சி துணை கமிஷனர் விஸ்வாஸ் சங்கர்வார் தலைமையில் மாநகராட்சியும் விசாரணை நடத்தி வருகிறது.

இந்தநிலையில் சிறுவன் சாக்கடையில் விழுந்து பலியான சம்பவத்துக்கு பொறுப்பேற்று மேயர் விஷ்வனாத் மகாதேஷ்வர் பதவி விலக வேண்டும் என கோரேகாவ் பகுதியில நேற்று பொது மக்கள் பேரணி நடத்தினர்.

மேலும் செய்திகள்