கூடலூர் அருகே, ஓடையில் மணல் அள்ளும் கும்பல்

கூடலூர் அருகே ஓடையில் சாக்குமூட்டைகளில் மணலை அள்ளி மர்ம கும்பல் கடத்தி செல்கின்றன.

Update: 2019-07-14 22:45 GMT
கூடலூர்,

கூடலூர் அருகே முல்லைப்பெரியாறு மற்றும் வனப்பகுதி ஓடைகளில் மர்மநபர்கள் லாரி, டிராக்டர்களில் மணல் அள்ளி கடத்தி வந்தனர். இதை தடுக்க வருவாய்த்துறை மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் ஆறு, ஓடைகளில் மணல் அள்ளுவது ஓரளவு குறைந்தது.

இந்தநிலையில் தற்போது மர்மகும்பல் நூதன முறையில் மணலை அள்ளி கடத்துகின்றன. அதாவது இரவு நேரங்களில் சாக்குமூட்டைகளில் மணல் அள்ளி பதுக்கி வைத்துக் கொள்கின்றனர். பின்னர் கூலித்தொழிலாளர்கள் மூலம் மணல் மூட்டைகளை சுமந்து கரைப்பகுதிக்கு கொண்டு வந்து லாரி, டிராக்டர்களில் கடத்துகின்றனர்.

அதன்படி கூடலூர் அருகே பெருமாள் கோவில்புலம் பகுதியில் உள்ள மந்தைவாய்க்கால் ஓடைப்பகுதியில் சாக்குமூட்டைகளில் மணலை அள்ளி கடத்துகின்றனர். இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் புகார் தெரிவித்தும் வருவாய்த்துறையினரோ, போலீசாரோ இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.

ஓடையில் தொடர்ந்து மணல் அள்ளப்பட்டு வருவதால் ஆங்காங்கே ராட்சத பள்ளம் ஏற்பட்டுள்ளது. மேலும் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து விவசாயமும் பாதிக்கப்படுவதாகவும் விவசாயிகளின் குற்றச்சாட்டாக உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு மணல் கடத்தும் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

மேலும் செய்திகள்