வாணுவம்பேட்டையில் மயான பூமி மூடப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

மயான பூமி மூடப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2019-07-15 21:50 GMT
ஆலந்தூர்,

சென்னை மாநகராட்சி ஆலந்தூர் மண்டலம் 165-வது வார்டுக்கு உட்பட்ட வாணுவம்பேட்டை முத்தியால்ரெட்டி நகரில் உள்ள மயானபூமி, பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென இந்த மயான பூமி மூடப்பட்டது.

தற்போது அந்த மயான பூமியில் மாநகராட்சி குப்பைகளை உரமாக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்தநிலையில் மயானபூமி முகப்பில் மாநகராட்சி அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. அதில், இந்த மயானபூமி மூடப்படுவதாகவும், இதற்கு பதிலாக இப்பகுதி மக்கள் ஆதம்பாக்கம், ஆலந்தூரில் உள்ள மின்சார தகன மேடையை பயன்படுத்த வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. ஆனால் மயான பூமி மூடப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி பொதுமக்கள், வாணுவம்பேட்டையில் வேளச்சேரி-பரங்கிமலை உள்வட்ட சாலையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் மடிப்பாக்கம் போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது சென்னை நகரில் புதைக்கவோ, தனிப்பட்ட முறையில் எரிக்கவோ மாநகராட்சி தடை விதித்துள்ளது என அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். ஆனால் பொதுமக்கள், அந்த விளக்கத்தை ஏற்க மறுத்தனர். வாணுவம்பேட்டை மயானபூமியில் குப்பைகளை உரமாக்கும் திட்டத்தை கைவிட்டு மின்சார தகனமேடை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இதுபற்றி சென்னை மாநகராட்சி கமிஷனரிடம் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்வதாக மாநகராட்சி அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இந்த சாலை மறியல் காரணமாக வேளச்சேரி-பரங்கிமலை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்