இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கக்கோரி திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை

இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கக்கோரி திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.

Update: 2019-07-16 22:30 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை நேற்று மெய்யூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் முற்றுகையிட்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். அப்போது அவர்கள் கூறியதாவது:-

நாங்கள் மெய்யூர் பகுதியில் காலம் காலமாக வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் கிராம நத்தம் உள்ளது. அதில் சிலருக்கு கிராம நத்தம் பட்டா வழங்கப்பட்டுள்ளது. எங்களுக்கு இலவச வீட்டுமனைகளை வழங்க வேண்டியும், கிராம நத்தங்களை அளவீடு செய்து பட்டா வழங்கக்கோரியும் பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் இதுநாள் வரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எங்களுக்கு இலவச வீட்டுமனைகளை வழங்க வேண்டும். கிராம நத்தங்களை அளவீடு செய்து பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

பின்னர் அவர்கள் இது தொடர்பான புகார் மனுவை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம் அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் அதன் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

திருவள்ளூரை அடுத்த அதிகத்தூரில் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலைக்காக நிலம் கொடுத்தவர்களுக்கு அந்த நிறுவனத்தில் பயிற்சி அளித்து வேலை வழங்கப்பட்டது. இங்கு 200-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தற்போது அந்த தொழிற்சாலை நிர்வாகம் அனைவரையும் பணிநீக்கம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது. தொழிற்சாலை நிர்வாகம் பன்னாட்டு நிறுவனத்திற்கு தனது 70 சதவீத பங்குகளை விற்பனை செய்வதாகவும் அறிவித்திருந்தது. இதை அறிந்த பணியாளர்கள் தங்களை பணியில் இருந்து அகற்றக்கூடாது என தொழிற்சாலை நிர்வாகத்திடம் கூறியுள்ளனர். இருப்பினும் தொழிற்சாலை நிர்வாகத்தினர் அவர்களுக்கு பணி வழங்கவில்லை.

இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் தங்களுக்கு மீண்டும் பணி வழங்க கோரி திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். பின்னர் அவர்கள் இது தொடர்பான புகார் மனுவை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம் அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் அதன் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

மேலும் செய்திகள்