பள்ளப்பட்டி கிராமத்தில், வைகை ஆற்றில் தடுப்பணை கட்ட பொதுப்பணித்துறையினர் அளவீடு

பள்ளப்பட்டி கிராமத்தில் வைகை ஆற்றில் தடுப்பணை கட்டுவதற்கு பொதுப்பணித்துறையினர் அளவீடு மேற்கொண்டனர்

Update: 2019-07-16 22:30 GMT
தேனி,

போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பள்ளப்பட்டி கிராமத்தில் ஏராளமான விவசாயிகள் உள்ளனர். இவர்கள் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து போனதால் விவசாயம் செய்வதற்கு தண்ணீர் இல்லாமல் மிகவும் க‌‌ஷ்டப்படுகின்றனர். மேலும் இங்குள்ள விவசாயிகள் கால்நடை வளர்ப்பு தொழிலையும் நம்பி உள்ளனர். இதனால் பள்ளப்பட்டி ஊருக்கு கிழக்கு பகுதியில் வைகை ஆற்றில் தடுப்பணை கட்டி தண்ணீர் தேக்கினால் நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்பு உள்ளது.

எனவே இந்த தடுப்பணை கட்டும் திட்டத்தை செயல்படுத்தி, அதற்கு தேவையான நிதியை சட்டமன்ற மானிய கோரிக்கையின் போது ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு கொடுத்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று மதுரையில் இருந்து பள்ளப்பட்டி கிராமத்திற்கு பொதுப்பணித்துறை (திட்டம் மற்றும் வடிவமைப்பு) கோட்ட உதவி பொறியாளர்கள் முத்துமாணிக்கம், நடராஜன், ராஜே‌‌ஷ்குமார் ஆகியோர் வந்து வைகை ஆற்றில் தடுப்பணை கட்டப்பட உள்ள இடத்தில் அளவீடு செய்தனர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது, தடுப்பணை அமைப்பது தொடர்பாக திட்ட மதிப்பீடு தயாரித்து அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றனர். இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இந்த ஆண்டிலேயே அரசு விரைவில் தடுப்பணை கட்டவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்