கம்பம் நகராட்சி பகுதியில், சாக்கடை கால்வாய் கட்ட இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு - அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகை

கம்பம் நகராட்சி பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-07-16 22:45 GMT
கம்பம்,

கம்பம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இதில் 7-வது வார்டு குரங்குமாயன் தெருவில் சாக்கடை கால்வாய் சேதமடைந்து உள்ளது. இதனால் கழிவு நீர் தெருக்களில் பெருக்கெடுத்து ஓடி துர்நாற்றம் வீசுவது மட்டுமல்லாமல் தொற்று நோய் பரவுவதாக மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவிடம் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் சாக்கடை கால்வாய் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்குமாறு கம்பம் நகராட்சி கமி‌‌ஷனர் (பொறுப்பு)செல்வராணிக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து நகராட்சி பொறியியல்துறையினர், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் இதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்தனர்.

இதைத்தொடர்ந்து பழைய சாக்கடை கால்வாய் மற்றும் தரை பாலங்களை அகற்றி விட்டு புதிதாக அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதையொட்டி நேற்று நகராட்சி கமி‌‌ஷனர்(பொறுப்பு) செல்வராணி தலைமையில் மேலாளர் முனிராஜ், கட்டிட ஆய்வாளர் தங்கராஜ் மற்றும் நகராட்சி பணியாளர்கள் அங்கு சென்று புதிய சாக்கடை கால்வாய் கட்டுமான பணிக்காக பழைய சாக்கடை கால்வாயை பொக்லைன் எந்திரத்தின் மூலம் அகற்றினர். அப்போது சிலர் சாக்கடை கால்வாயை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டியிருந்தனர். அதனை அகற்ற முயன்றபோது பொதுமக்கள் சிலர் நகராட்சி அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு கம்பம் வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பவுன்ராஜ் தலைமையில் போலீசார் விரைந்து வந்து முற்றுகையிட்டவர்களை எச்சரிக்கை செய்தனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் சாக்கடை கால்வாயில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

மேலும் செய்திகள்