நாகர்கோவில் அருகே இரட்டைக்கொலை: சரணடைந்த 2 பேரை காவலில் எடுக்க போலீசார் கோர்ட்டில் மனு

நாகர்கோவில் அருகே இரட்டைக்கொலையில் சரண்அடைந்த 2 பேரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

Update: 2019-07-16 22:00 GMT
நாகர்கோவில்,

நாகர்கோவில் அருகே உள்ள வண்டிக்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் அர்ஜூன் (வயது 17). இவருடைய நண்பர் அஜித்குமார் (21). சம்பவத்தன்று இவர்கள் 2 பேரும் வண்டிக்குடியிருப்பு அருகே சி.டி.எம்.புரம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது 4 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக சுசீந்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த கொலையில் தொடர்புடைய என்.ஜி.ஓ. காலனி அருகே காமராஜ் சாலையை சேர்ந்த ரமேஷ், மினி பஸ் டிரைவரான சுந்தர் ஆகிய 2 பேர், சென்னை தாம்பரம் கோர்ட்டில் சரண் அடைந்தனர். கோர்ட்டு உத்தரவுப்படி அவர்கள் 2 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய என்.ஜி.ஓ. காலனி காமராஜ் சாலையை சேர்ந்த ராமச்சந்திரன் என்ற மோகன், பறக்கை அரசன்காட்டுவிளையை சேர்ந்த நிஷாந்த் ஆகிய 2 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

போலீசார் முடிவு

இதற்கிடையே புழல் சிறையில் இருந்த சுந்தர் மற்றும் ரமேஷ் ஆகிய 2 பேரும் நாகர்கோவிலில் உள்ள 1-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நாகர்கோவிலில் உள்ள ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.இந்நிலையில் சுந்தர், ரமேஷ் ஆகியோரை காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர். இதற்காக போலீசார் நாகர்கோவில் 1-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு ஒன்றை நேற்று தாக்கல் செய்தனர். கோர்ட்டின் அனுமதி கிடைத்ததும் போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்துவார்கள் என தெரிகிறது.

மேலும் செய்திகள்