கணக்கில் வராத ரூ.41 ஆயிரம் பறிமுதல்: சார்பதிவாளர் உள்பட 4 பேர் மீது வழக்கு

நாமக்கல் இணைசார்பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.41 ஆயிரத்தை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சார்பதிவாளர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

Update: 2019-07-16 22:15 GMT
நாமக்கல்,

நாமக்கல்லில் உள்ள மோகனூர் சாலையில் இணைசார்பதிவாளர் அலுவலகம் எண்-2 செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் பத்திரப்பதிவு உள்ளிட்ட பணிகளுக்கு அலுவலர்கள் லஞ்சம் கேட்பதாக நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் நேற்று முன்தினம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெய்குமார் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென அந்த அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்டனர். மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெற்ற இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.41 ஆயிரத்து 470-ஐ லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.

4 பேர் மீது வழக்குப்பதிவு

இது தொடர்பாக சார்பதிவாளர் சுந்தர வடிவேல், அலுவலக உதவியாளர் மணிவண்ணன், கேமரா ஆபரேட்டர் தமிழ்செல்வன் மற்றும் புரோக்கர் பாபு என 4 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

மேலும் சார்பதிவாளர் உள்பட 3 பேர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க சென்னை பத்திரப்பதிவுத்துறை உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பவும் லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்து உள்ளனர். 

மேலும் செய்திகள்