தர்மபுரியில் ஆசிரியையிடம் லஞ்சம் வாங்கிய வட்டார கல்வி அலுவலர், உதவியாளர் கைது

தர்மபுரியில் ஊதிய நிலுவை தொகையை வழங்க அரசு பள்ளி ஆசிரியையிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வட்டார கல்வி அலுவலர் மற்றும் அவருடைய உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-07-16 22:15 GMT
தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் சிக்கம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியையாக பணிபுரிந்து வருபவர் மீனா. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவ விடுமுறை எடுத்து இருந்தார். பின்னர் கடந்த மாதம் மீண்டும் பணிக்கு வந்த இவருக்கு 2 மாத ஊதியம் வழங்கப்படாமல் நிலுவையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மீனா தர்மபுரியில் உள்ள வட்டார கல்வி அலுவலகத்திற்கு சென்று நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்க பரிந்துரைகளை அனுப்ப கோரி உள்ளார்.

அப்போது வட்டார கல்வி அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரியும் குமரேசன், மீனாவை அணுகி வட்டார கல்வி அலுவலர் மேரி சகாயராணிக்கு (வயது 57) ரூ.3 ஆயிரமும், தனக்கு ரூ.2 ஆயிரமும் என மொத்தம் ரூ.5 ஆயிரம் வழங்கினால் ஊதிய நிலுவை தொகையை வழங்க உரிய அனுமதியை பெற்று தருவதாக கூறி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மீனா தர்மபுரி லஞ்ச ஒழிப்பு போலீஸ் நிலையத்தில் இதுபற்றி புகார் அளித்தார்.

2 பேர் கைது

இதையடுத்து நேற்று ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளுடன் வட்டார கல்வி அலுவலகத்திற்கு சென்ற மீனா, உதவியாளர் குமரேசனிடம் ரூ.5 ஆயிரத்தை கொடுத்து உள்ளார். அதில் ரூ.2 ஆயிரத்தை எடுத்து கொண்ட குமரேசன் மீதமுள்ள ரூ.3 ஆயிரத்தை வட்டார கல்வி அலுவலர் மேரி சகாயராணியின் அலுவலக அறையில் உள்ள மேஜையில் வைத்து உள்ளார்.

சற்று நேரம் கழித்து அந்த பணத்தை எடுத்தபோது அந்த பகுதியில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் தலைமையிலான போலீசார், லஞ்சம் பெற்ற மேரி சகாய ராணியை கையும் களவுமாக பிடித்தனர். இதுதொடர்பாக அவரிடமும், உதவியாளர் குமரேசனிடமும் 3 மணிநேரம் துருவி, துருவி விசாரணை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நேற்று இரவு மேரி சகாயராணி, குமரேசன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். 

மேலும் செய்திகள்