மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 1,810 மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைப்பு - கலெக்டர் தகவல்

தேனி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 1,810 மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

Update: 2019-07-17 22:30 GMT
சின்னமனூர், 

தேனி மாவட்டத்தில் நீர்மேலாண்மையை மக்கள் இயக்கமாக கொண்டு செல்லும் வகையில், பொதுமக்களுடன் இணைந்து மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைத்தல், மரக்கன்றுகள் நடவு செய்தல் போன்ற பணிகள் நேற்று மேற்கொள்ளப்பட்டன. பள்ளி கட்டிடங்கள், வழிபாட்டு தலங்கள், வணிக வளாக கட்டிடங்கள், தனிநபர் வீடுகள் ஆகிய இடங்களில் ஒரே நாளில் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைக்கும் பணிகள் நேற்று நடத்தப்பட்டது.

அதன்படி, சின்னமனூர் அருகே எரசக்கநாயக்கனூர் ஊராட்சியில் நீர் மேலாண்மையை மக்கள் இயக்கமாக கொண்டு செல்லும் வகையில், அங்குள்ள லட்சுமி நாராயணன் கோவிலில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்கும் பணி மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளியில் மரக்கன்று நடும் பணி, கண்மாய் தூர்வாரும் பணி போன்றவை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கி, பணிகளை தொடங்கி வைத்தார். மழைநீர் சேகரிப்பு அமைத்தல், மரக்கன்றுகள் நடுதல், கண்மாய் தூர்வாரும் பணிகளை தொடங்கி வைத்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர் பேசினார்.

அதைத்தொடர்ந்து கலெக்டர் பல்லவி பல்தேவ் கூறியதாவது:-

நீர் மேலாண்மையை மக்கள் இயக்கமாக கொண்டு செல்ல பொதுமக்கள், தன்னார்வலர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து தேனி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில், 130 ஊராட்சிகளில் 1,645 இடங்களில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்கப்பட்டது.

22 பேரூராட்சிகளில் 131 இடங்களிலும், 6 நகராட்சிகளில் 34 இடங்களிலும் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைக்கப்பட்டன. மொத்தம், 1,810 இடங்களில் ஒரே நாளில் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைக்கும் பணிகள் நேற்று நடந்தன. அவை அமைக்கப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

மேலும், மாவட்டத்தில் உள்ள 4,500 மகளிர் சுய உதவிக்குழுக்களில் உள்ள 50 ஆயிரம் உறுப்பினர்களைக் கொண்டு தலா ஒரு மரக்கன்று வீதம் 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்திட திட்டமிடப்பட்டது. அதன்படி, நேற்று ஒரே நாளில் 16 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன.

நீர்மேலாண்மை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துகின்ற வகையில் மாவட்டத்திலுள்ள அரசு பள்ளிகளில் பயிலுகின்ற 13 ஆயிரத்து 326 மாணவ, மாணவிகள், தனியார் பள்ளிகளில் பயிலுகின்ற 2 ஆயிரத்து 707 மாணவ, மாணவியர்கள், கல்லூரிகளில் பயிலுகின்ற 490 மாணவ, மாணவிகளைக் கொண்டு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டன. நீர்மேலாண்மை பணிகளுக்கு பொதுமக்கள் தங்களது ஒத்துழைப்பினை நல்கி, எதிர்கால சந்ததினர்களுக்கு நீர் பற்றாக்குறை இல்லாத மாவட்டமாக மாற்றிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் திலகவதி, செயற்பொறியாளர் கவிதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாண்டியன், ஜெகதீசன், பள்ளி தலைமை ஆசிரியர் கோவிந்தன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், மகளிர் சுய உதவிகுழுவினர், பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்