திருமணம் ஆன ஒரு வாரத்தில் மினிலாரி மோதி புதுமாப்பிள்ளை பலி
திருமணம் ஆன ஒரு வாரத்தில் மோட்டார்சைக்கிளில் வந்த புதுமாப்பிள்ளை மினிலாரி மோதி பலியானார். இந்த விபத்து குறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது:-;
ஆண்டிப்பட்டி,
ஆண்டிப்பட்டி அருகே உள்ள வடக்கு மூணாண்டிபட்டியை சேர்ந்த தவமணி என்பவரின் மகன் மலைச்சாமி (வயது26). தனியார் நிறுவனத்தில் பொக்லைன் எந்திரம் ஆபரேட்டராக வேலை செய்து வந்தார். இவருக்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்புதான் திருமணம் நடந்தது.
இந்தநிலையில் மலைச்சாமிக்கு உடல்நிலை சரியில்லை. எனவே அவர் நேற்று தருமத்துபட்டி கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெறுவதற்காக தனது மோட்டார்சைக்கிளில் வந்தார். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று விட்டு மீண்டும் வீட்டிற்கு மோட்டார்சைக்கிளில் திரும்பி சென்று கொண்டிருந்தார்.
இந்தநிலையில் தருமத்துபட்டியை அடுத்து வரும்போது அந்த வழியாக வாழைக்காய் பாரம் ஏற்றி வந்த மினி லாரி, எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட மலைச்சாமி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், ஆண்டிப்பட்டி போலீசார் விரைந்து வந்து மலைச்சாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மினிலாரி டிரைவர் வத்தலக்குண்டு செக்காபட்டியை சேர்ந்த பாண்டி(40)என்பவரை கைது செய்தனர். திருமணமான ஒருவாரத்தில் புதுமாப்பிள்ளை விபத்தில் இறந்த சம்பவம் வடக்கு மூணாண்டிபட்டி கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.