தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு இலவச வீட்டுமனை கேட்டு மக்கள் தர்ணா போராட்டம்

தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு வீட்டுமனை வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.

Update: 2019-07-22 22:50 GMT
தேனி,

தேனி, பெரியகுளம், சின்னமனூர், போடி பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 100 பேர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். அவர்களுடன் இந்திய தொழிற்சங்கங்களின் சம்மேளன நிர்வாகிகளும் வந்தனர். மாவட்டத்தில் வீடு இல்லாத ஏழை, எளிய மக்களுக்கு அரசு திட்டத்தின் கீழ் இலவச வீட்டுமனை வழங்கி, வீடு கட்டிக் கொடுக்க வேண்டும் என்று மனு கொடுக்கும் போராட்டம் நடத்தப்போவதாக அவர்கள் தெரிவித்தனர்.

அதன்படி, கலெக்டர் அலுவலகம் முன்பு அவர்கள் கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மாநில தலைவர் செல்வம், மாநில செயலாளர் ஸ்டாலின்பாபு மற்றும் பலர் கலந்துகொண்டனர். போராட்டம் நடத்தியவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை மொத்தமாக சேகரித்து, அவற்றை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் வழங்குவதற்கு தொழிற்சங்க நிர்வாகிகள் கொண்டு சென்றனர்.

ஆனால், குறைதீர்க்கும் கூட்டத்தில் ஒரே நபரிடம் மொத்தமாக மனுக்கள் வாங்க முடியாது என்றும், தனித்தனியாக மனுக்களை வழங்க வேண்டும் என்றும் கூறியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் மனு கொடுக்காமல் திரும்பி வந்து, பொதுமக்களிடம் இந்த விவரத்தை தெரிவித்தனர். இதனால், பொதுமக்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி, பொதுமக்களில் சிலர் மட்டும் வந்து மொத்தமாக மனுக்களை கொடுக்குமாறு அறிவுறுத்தினார். அதன்படி சிலர் மட்டும் சென்று மனுக்களை அளித்தனர். மனு கொடுத்துவிட்டு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்