உத்தமபாளையம் அருகே போலி உர தொழிற்சாலைக்கு ‘சீல்’; வேளாண்மைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை

உத்தமபாளையம் அருகே செயல்பட்டு வந்த போலி உர தொழிற்சாலைக்கு வேளாண்மைத்துறை அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.;

Update:2019-07-24 04:30 IST
உத்தமபாளையம்,

தேனி மாவட்டம், கோம்பை சிக்கச்சியம்மன் கோவில் மேடு அருகே போலியாக உர தொழிற்சாலை செயல்படுவதாக கலெக்டர் பல்லவி பல்தேவிடம் விவசாயிகள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து கலெக்டர் உத்தரவின்பேரில் உத்தமபாளையம் வேளாண்மை உதவி இயக்குனர் சுந்தரமகாலிங்கம், மாவட்ட வேளாண்மைத்துறை தரக்கட்டுப்பாட்டு அலுவலர் (பொறுப்பு) பிரசன்னா, வேளாண்மை அலுவலர் தெய்வேந்திரன் மற்றும் அதிகாரிகள் குழுவினர் நேற்று மாலை கோம்பை வந்தனர். அங்கு தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தில் இயங்கி வந்த உர தொழிற்சாலையை ஆய்வு செய்தனர். அங்கு கேரள மாநிலத்தை சேர்ந்த அனீஸ் என்பவர் இயற்கை உரங்கள் தயாரிப்பதாக கூறினார்.

இதையடுத்து அந்த தொழிற்சாலையில் அதிகாரிகள் தொடர்ந்து சோதனை மேற்கொண்டனர். அதில் விவசாயத்திற்கு தேவையான உரங்கள் தயாரிக்கப்பட்டு 20 கிலோ மூட்டையாகவும், 10 கிலோ மூட்டையாகவும் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் ரூ.5 லட்சம் மதிப்பில் ரசாயன மருந்துகள், போலியான உரக்கலவை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவையில்லாமல் உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளில் மதுரை, அலங்காநல்லூர் என்ற முகவரி அச்சிடப்பட்டு இருந்தது.

இதையடுத்து அந்த முகவரி வைத்து அதிகாரிகள் போனில் தொடர்பு கொண்டு விசாரணை நடத்தினர். அங்கு ரசாயன தயாரிக்கும் தொழிற்சாலை இல்லை என்பது தெரியவந்தது. மேலும் போலியாக உரம் தயாரித்து கேரள மாநிலத்திற்கு விற்பனைக்கு அனுப்புவது தெரியவந்தது. இதையடுத்து போலியாக செயல்பட்ட உர தொழிற்சாலைக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

இதுகுறித்து உத்தமபாளையம் வேளாண்மை உதவி இயக்குனர் சுந்தரமகாலிங்கம் கூறுகையில், மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில் உர தொழிற்சாலையில் சோதனை மேற்கொண்டோம். அது போலியான உர தொழிற்சாலை என கண்டுபிடிக்கப்பட்டது. தொழிற்சாலையில் உர பாக்கெட்டுகளில் ஒட்டுவதற்கு தமிழ் மற்றும் மலையாள எழுத்துகளில் போலியாக ‘ஸ்டிக்கர்கள்’ இருந்தன. இயற்கை உரம் தயாரிக்கிறோம் என கூறினர். அதற்கான எந்த உபகரணமும் இல்லை. எனவே போலியாக உரம் தயாரித்த தொழிற்சாலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து கோம்பை போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளோம். இதுசம்பந்தமாக அனீஸ் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்