கர்நாடகத்தில் தனியார் கடன் தள்ளுபடி - குமாரசாமி பேட்டி

கர்நாடகத்தில் தனியார் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்கான அரசாணை கடைசி நாளில் பிறப்பிக்கப்பட்டதாகவும் குமாரசாமி கூறினார்.

Update: 2019-07-25 00:15 GMT
பெங்களூரு, 

முதல்-மந்திரி (பொறுப்பு) குமாரசாமி பெங்களூருவில் உள்ள கிருஷ்ணா இல்லத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

எனது தலைமையிலான அரசு நேற்று(அதாவது நேற்று முன்தினம்) நம்பிக்கை வாக் கெடுப்பில் தோல்வி அடைந்து ஆட்சி அதிகாரத்தை இழந்துவிட்டது. இதையடுத்து முதல்- மந்திரி பதவியை ராஜினாமா செய்துள்ளேன். கடந்த 14 மாதங்களில் தலைமை செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகளின் கூட்டத்தை நடத்தினேன். அவர்கள் முழு ஒத்துழைப்பு வழங்கினர். அவர்களுக்கு நன்றி தெரிவித்தேன்.

அதிகாரிகள் வழங்கிய ஒத்துழைப்பால் சிறப்பான முறையில் திட்டங்களை செயல்படுத்த முடிந்தது. கர்நாடகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு பல்வேறு திட்ட பணிகளை அமல்படுத்தினோம். விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்து வரலாற்று சிறப்புமிக்க முடிவை எடுத்தோம். தனியார் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களிடம் இருந்து பொதுமக்கள் பெற்ற கடனை தள்ளுபடி செய்துள்ளோம். இதற்காக ஒரு சட்டத்தை கொண்டு வந்துள்ளோம்.

இந்த சட்டத்திற்கு எனது அரசின் கடைசி நாளான நேற்று முன்தினம் அரசாணையை பிறப்பித்துள்ளோம். நிலம் இல்லாத ஏழைகள், விவசாய கூலித்தொழிலாளர்கள், ஆண்டுக்கு ரூ.1.20 லட்சம் வருமானம் உள்ளவர்களுக்கு இந்த சட்டம் பொருந்தும். அரசாணை வெளியான நாளில் இருந்து 90 நாட்களுக்குள் கடன் பெற்றவர்கள் உதவி கலெக்டர்களை நேரில் சந்தித்து விவரங்களை தெரிவிக்க வேண்டும். இந்த சட்டம் ஓராண்டு அமலில் இருக்கும்.

கர்நாடகத்தில் ஆட்சியை கவிழ்க்க தொடர்ந்து முயற்சிகள் நடைபெற்று வந்தன. அந்த சூழ்நிலையிலும் நாங்கள் சிறப்பான ஆட்சியை நடத்தி இருக்கிறோம். அடுத்த சில நாட்களில் கர்நாடக அரசியலில் என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. மாநிலத்தில் நிலையற்ற அரசியல் தொடரும். எந்த நேரத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.

அரசியல் குழப்பங்கள் பற்றி கவலைப்படாமல் அதிகாரிகள் தங்களின் பணிகளை சிறப்பாக செய்ய வேண்டும் என்று நான் அறிவுரை கூறினேன்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

மேலும் செய்திகள்