பெண் சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் சாலை மறியல் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

பெண் சாவில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், ஜெயங்கொண்டத்தில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2019-07-25 23:00 GMT
ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகில் உள்ள வாணதிரையன்பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் ராசப்பன் மகன் ராஜ்குமார் (வயது 30). இவருக்கும், தஞ்சை மாவட்டம் ஆண்டலூர் கிராமத்தை சேர்ந்த குமார் மகள் சுபிதாவுக்கும்(26) கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. குமார் திருப்பூரில் தங்கியிருந்து மினிலாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை உடல்நிலை சரியில்லாமல் இருந்த சுபிதாவை, ராஜ்குமாரின் தங்கை சவுந்தர்யா ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சுபிதா இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சுபிதா சாவில் மர்மம் இருப்பதாகவும், அவரது கணவரின் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சுபிதாவின் பெற்றோர் குமார், இந்திரகாந்தி ஆகியோர் உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதையடுத்து சுபிதாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை பிரேத கூடத்தில் வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் சுபிதாவின் சாவில் மர்மம் இருப்பதாகவும், ஆனால் இது தொடர்பாக நேற்று காலை வரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று போலீசாரை கண்டித்தும், சுபிதாவிற்கு திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்த வேண்டும் என்றும், அதுவரை சுபிதாவின் உடலை வாங்க மாட்டோம் என்றும் சுபிதாவின் உறவினர்கள் கூறி, திடீரென்று ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சுபிதாவின் இறப்பு குறித்து உடையார்பாளையம் போலீசார் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் மறியலை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தினால் சுமார் 1 மணி நேரம் பாதிக்கப்பட்டிருந்த போக்குவரத்தை போலீசார் ஒழுங்குப்படுத்தினர். இதையடுத்து சுபிதாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவருடைய பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்