உடன்குடி அனல்மின் நிலையத்துக்கு மண் ஏற்றிச் சென்ற 8 லாரிகள் சிறைபிடிப்பு

உடன்குடி அனல்மின் நிலையத்துக்கு மண் ஏற்றிச் சென்ற 8 லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.

Update: 2019-07-25 22:15 GMT
உடன்குடி, 

உடன்குடியில் அனல்மின் நிலையம் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக அனல்மின் நிலைய வளாகத்தில் கரம்பை மண், பாறாங்கற்கள் கொட்டப்பட்டு மேடாக்கப்படுகிறது. இதற்காக உடன்குடி அருகே உள்ள தாங்கைகுளம், கல்லாநேரி குளம், புல்லாநேரி குளம் உள்ளிட்ட குளங்களில் இருந்து லாரிகளில் கரம்பை மண் எடுத்து வரப்படுகிறது. சாத்தான்குளம், திசையன்விளை அருகே உள்ள கல்குவாரிகளில் இருந்து லாரிகளில் பாறாங்கற்கள் ஏற்றி வரப்படுகிறது.

கரம்பை மண், பாறாங்கற்கள் ஏற்றி செல்லும் லாரிகள், அதிக வேகத்தில் செல்வதால் அடிக்கடி விபத்துகள் நிகழ்ந்து உயிரிழப்புகள் ஏற்படுகிறது. எனவே உடன்குடி அனல்மின் நிலையத்துக்கு கரம்பை மண், பாறாங்கற்கள் ஏற்றிச் செல்லும் லாரிகள் தங்களது கிராமங்களின் வழியாக அசுர வேகத்தில் செல்லக்கூடாது என்று வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் உடன்குடி அனல்மின் நிலையத்துக்கு கரம்பை மண் ஏற்றி சென்ற 3 லாரிகளை, உடன்குடி சிதம்பர தெருவில் பொதுமக்கள் சிறைபிடித்தனர். ஊர் தலைவர் ரசாக், வியாபாரிகள் முன்னேற்ற சங்க தலைவர் ரவி, ஆம் ஆத்மி கட்சி மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் குணசீலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

உடனே குலசேகரன்பட்டினம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, லாரிகளை சிறைபிடித்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உடன்குடி சிதம்பர தெரு வழியாக உடன்குடி அனல்மின் நிலையத்துக்கு லாரிகள் செல்லாமல், மாற்றுப்பாதையில் திருப்பி விடப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து லாரிகளை பொதுமக்கள் விடுவித்து, கலைந்து சென்றனர்.

முன்னதாக மாலையில் இதேபோன்று உடன்குடி அருகே கலியன்விளையிலும் கிராம மக்கள், அனல்மின் நிலையத்துக்கு கரம்பை மண் ஏற்றிச் சென்ற 5 லாரிகளை சிறைபிடித்தனர். உடனே மெஞ்ஞானபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, லாரிகளை சிறைபிடித்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அந்த லாரிகளை பொதுமக்கள் விடுவித்து, கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்